துரைமுருகனை நெகிழ்ச்சியுடன் கட்டிப்பிடிக்கும் வைகோ…!! பொறுப்பு அம்பேலாகப் போகுதா என நெட்டிசன்கள் கிண்டல்!!

First Published Jul 25, 2017, 11:44 AM IST
Highlights
vaiko hugging duraimurugan


சென்னையில் நடைபெற்ற கவிக்கோ அப்துல் ரகுமானின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும், துரைமுருகனும் கட்டிப்பிடித்து அளவளாவியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால்  ஸ்டாலின் பரமவைரியாக நினைக்கும் வைகோவுடன் துரை முருகன் நட்பு பாராட்டியது அவரது பொறுப்புக்கு வேட்டு வைக்கும் என நெட்டிசன்கள் கிண்டல் அடித்துள்ளனர்.

திமுகவில் இருந்து  வைகோ வெளியேறிதில் இருந்து ஸ்டாலின் மற்றும் வைகோ இடையே பகை வளர்ந்து வருகிறது என்றே சொல்லலாம்.

கருணாநிதி அருகே வைகோவை அண்டவிடாமல் ஸ்டாலின் தடுத்து வருகிறார் என்றும் குற்றசாட்டு உள்ளது. பல தேர்தல்களில் திமுக, மதிமுக இடையே கூட்டணி அமைக்க பலர் முயன்றபோதும் அதை ஸ்டாலின் தடுத்து வந்தார்.

கருணாநிதி உடல்நிலை சரியில்லாமல் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரை காணச்சென்ற வைகோவை, ஸ்டாலின் ஆதரவாளர்கள் விரட்டி அடித்தனர். அந்த அளவுக்கு ஸ்டாலினுக்கும் வைகோவுக்கும் ஏழாம்பொருத்தமாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில் சென்னை காமராஜர் அரங்கில் மறைந்த கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன், கவிஞர் வைரமுத்து, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம்.காதர்மொய்தீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹி ருல்லா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகி பேராசிரியர் அருணன், மனித நேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமீமுன் அன்சாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மேடைக்கு வந்த துரைமுருகனை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கட்டிப்பிடித்து வரவேற்றார். தொடர்ந்து அவருடன் நலம் விசாரித்து பேசிக் கொண்டிருந்தார்.

இந்த சம்பவம் அங்கிருந்தவர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. எதிர்எதிர் கட்சிகளாக இருந்ததாலும் இந்த  தலைவர்கள் மேடையில் காட்டிய அரசியல் நாகரீகத்தை அனைவரும் பாராட்டினர்.

ஆனால் வைகோவிடம் நட்பு பாராட்டியதால் ,  துரை முருகனின் பதவியும், பொறுப்பும் பறிக்கப்படப் போகிறது என்றும், துரைமுருகன் இனி அவ்வளவுதான் எனவும் நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.

ஆனால் மு.க.ஸ்டாலின் அந்த மாதிரி இல்லை என்றும், அவரும் அரசியல் நாகரீகம் பேணிக்காப்பவர் என்றும் திமுக தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் துரை முருகன் கட்சியின் சீனியர் என்றும், அவர் மீது ஸ்டாலின் மிகப் பெரிய மரியாதை வைத்து பொறுப்பு அளித்திருக்கிறார் என்றும் திமுகவினர் நெட்டிசன்களுக்கு பதில் அளித்துள்ளனர்.

click me!