மாநிலங்களவை தேர்தலில் வைகோ போட்டி ! மதிமுக உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் முடிவு… உற்சாகத்தில் தொண்டர்கள் !!

By Selvanayagam PFirst Published Jul 2, 2019, 11:24 PM IST
Highlights


சென்னை தாயகத்தில் மதிமுக உயர்மட்ட குழு கூட்டத்தில் அக்கட்சியின்  பொதுச் செயலாளர் வைகோவை மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் வேட்பாளராக முன்னிறுத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதனை மதிமுக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

தமிழ்நாடு சட்டமன்ற பேரவைக்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை வாக்காளர்களாக கொண்டு மாநிலங்களவைக்கு 6 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க தேர்தல் வருகிற 18ம் தேதி நடைபெற உள்ளது.

மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று தேர்தல் மன்னன் என்று அழைக்கப்படும் பத்மராஜன் சுயேட்சையாக மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில் மதிமுக உயர்நிலை கூட்டம் மற்றும் மதிமுக மாவட்ட செயலாளர்கள் கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை எழும்பூரில் உள்ள தாயகத்தில் நடைபெற்றது. அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 11 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

அதில் திமுக கூட்டணியில் தேர்தல் ஒப்பந்தப்படி ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி ஒதுக்கப்பட உள்ள நிலையில், அந்த இடத்திற்கு போட்டியிடும் வேட்பாளர் பற்றி ஆலோசிக்கப்பட்டது. 

அதில் வைகோ போட்டியிடுவது என ஒருமனதாக கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை மாநிலங்களைவை வேட்பாளராக முன்னிறுத்துவது என்றும் மதிமுகவுக்கு மாநிலங்களவை இடம் அளித்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ 3 முறை மாநிலங்களவை உறுப்பினராகவும் 2 முறை மக்களவை உறுப்பினராகவும் பதவி வகித்தவர்.இதனையடுத்து வேட்பு மனுவை வைகோ விரைவில் தாக்கல் செய்வார் எனத் தெரிகிறது. 

இதனைத் தொடர்ந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டார்.

click me!