இனி திமுக சரிபட்டு வராது !! கூட்டணி மாறத் தயாராகும் வைகோ, திருமா !!

By Selvanayagam PFirst Published Nov 30, 2018, 7:25 AM IST
Highlights

திமுகவினரால் தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டு வருதாக நினைக்கும் மதிமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தங்களுடன் கூட்டணி வைத்துக் கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2106 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இடது சாரிகள் மற்றும் மதிமுக இணைந்து மக்கள் நலக் கூட்டணியைத் தொடங்கினர். இந்தக் கூட்டணி தோல்வி அடைந்திருந்தாலும், திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுத்தது. ஆனால் அந்த தேர்தலுக்குப் பிறகு  வைகோ மற்றும் தொல்,திருமாவளவன் ஆகியோர் திமுகவுடன் ஒரு சுமூகமான உறவை வைத்துக் கொண்டுள்ளனர்.

இந்த உறவுக்குத்தான்  துரை முருகன் வேட்டு வைத்தார். அவர் வைத்த  வேட்டுதான் தற்போது வரை புகைந்து கொண்டிருக்கிறது. விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக ஆகியோர் அதிகாரபூர்வமான கூட்டணியில் இல்லை என்ற துரைமுருகன் பேசியது தொடர் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனிடையே திருமாவளவனையும், வைகோவையும் நேரில் சந்தித்த ஸ்டாலின் அவர்களை சமாதானப்படுத்தினார். ஆனால் இந்த சந்திப்பு ஏதோ போனால் போகிறது என சந்தித்தைப் போலவே இருந்ததை வைகோவும், திருமாவும் உணர்ந்தே இருந்தனர்.

துரைமுருகனின் பேட்டி சர்ச்சைக்குள்ளாகி திமுக கூட்டணிக்குள் குழப்பம் என்ற தகவல் கேள்விப்பட்டதுமே முதலமைச்சர் எடப்பாடி குஷியாகிவிட்டார். ஏற்கனவே அவர் திமுக கூட்டணிக்குள் என்ன நடக்கிறது என்பது பற்றி அவ்வப்போது விசாரித்துக்கொண்டுதான் இருக்கிறார்.

இந்நிலையில் நாகைக்குக் கிளம்புவதற்கு முன்னால் அமைச்சர் வேலுமணியிடம் இதுபற்றிப் பேசியிருக்கிறார் எடப்பாடி. ‘2016 தேர்தல்ல வைகோ, திருமாவளவன் , கம்யூனிஸ்டுகள் எல்லாம் சேர்ந்து மக்கள் நலக் கூட்டணி அமைக்கலேன்னா இன்னிக்கு நான் முதலமைச்சரா இருக்க முடியாது, நீங்க அமைச்சரா இருக்க முடியாது.

திமுக இன்னும் 20 இடத்துல ஜெயிச்சிருந்தா அவங்கதான் ஆளுங்கட்சி. அதனால நாம ஒருவகையில வைகோவுக்கும், திருமாவுக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கோம் என கூறியிருக்கிறார்..

இப்ப வைகோவுக்கு அங்க நிலைமை சரியில்லைனு நினைக்கிறேன். கஜா விஷயத்துல அவர் தமிழக அரசைத் தொடர்ந்து பாராட்டினது ஸ்டாலினுக்குப் பிடிக்கலை. ஸ்டாலினுக்குப் பிடிக்கலைனு தெரிஞ்சுதான் அவர் என்னைக் கூடத் தாக்கிப் பேசியிருப்பார்னு நினைக்கிறேன். வைகோவை அவங்க கூட்டணியில இருந்து நிச்சயம் ஏதாவது சொல்லி கழட்டிவிடத்தான் பார்ப்பாங்க.

நாம வர்ற எலக்‌ஷன்ல பாஜக கூட கூட்டணி வைக்கிற மாதிரி இல்லை. அதுக்காக எந்தக் கூட்டணியும் இல்லாம அம்மா மாதிரி நாம தனியா நிக்கிற நிலைமையும் இப்ப இல்லை. வைகோகிட்ட பேசிப் பாருங்க. அம்மா அவரை அண்ணன்னு கூப்பிட்டிருக்காங்க. அவர் நம்ம கூட வந்தாருன்னா நமக்கு களத்துல பெரிய பலமா இருக்கும். நம்மளைப் பத்தி நமக்கே தெரியாத ப்ளஸ் பாயின்ட்டை எல்லாம் வைகோ எடுத்துச் சொல்லுவாரு. பிரசாரத்துக்கு நமக்கு பெரிய தூணா இருப்பாரு. அதனால நீங்க அவர்கிட்ட முதல்ல பேசுங்க. அப்புறம் நான் பேசுறேன்’ என்று சொல்லியிருக்கிறார் எடப்பாடி.

இதையடுத்து அமைச்சர் வேலுமணி தனக்கும் வைகோவுக்கும் நெருக்கமான கோவை வட்டாரத் தொழிலதிபர் ஒருவரிடம் இதுபற்றிப் பேசியிருக்கிறாராம்.

வைகோ மீது மட்டுமல்ல திருமாவளவனை நோக்கியும் எடப்பாடியின் கவனம் முன்பே திரும்பியிருக்கிறது. சமீபத்தில் தலைமைச் செயலகத்தில் தன்னைச் சந்தித்த திருமாவளவனிடம் நிறைய விஷயங்களைப் பேசியிருக்கிறார் எடப்பாடி.

அப்போது தனது பர்சனல் செல் நம்பரைக் கொடுத்த எடப்பாடி, ‘எதுனாலும் என்கிட்ட பேசுங்க. செகரட்டரி மூலமா பேச வேணாம். என்ன உதவி வேணும்னாலும், எப்ப வேணும்னாலும் என்கிட்ட பேசுங்க. கீழேயிருந்து வந்திருக்கும் என்னைப் போன்றவங்களுக்கு உங்க ஆதரவு வேணும்’ என்று வெளிப்படையாகவே பேசியிருக்கிறார். திருமாவளவனும் நன்றி சொல்லிவிட்டு வந்திருக்கிறார். தொடர்ந்து திருமாவளவனிடமும் எடப்பாடியின் சார்பில் சிலர் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

திமுக கூட்டணியில் நடக்கும் குழப்பங்களை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும் எடப்பாடி, அங்கே வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட கட்சிகளின் கீழ் மட்ட நிர்வாகிகள் திமுக கூட்டணியை விரும்புகிறார்களா என்பது பற்றி ரிப்போர்ட் தருமாறும் உளவுத்துறையைக் கேட்டிருக்கிறாராம். அந்த ரிப்போர்ட்டை வைத்து அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள் இருக்கும் என்கிறார்கள்.

எனவே அடுத்து விரைவில் இருக்கும் புதிய கூட்டணி பேச்சவார்த்தை என்கிறது அரசியல் வட்டாரம். ஆனால் வைகோவையும், திருமாவளவனையும் எளிதில் விட்டுவிடமாட்டார் ஸ்டாலின் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். ஏற்கனவே பட்டது போதும் என ஸ்டாலின் நினைக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

click me!