DMK : உங்களுக்கு சீட் இவ்வளவு தான் ! கறார் காட்டிய முதல்வர் ஸ்டாலின்.. பதறும் கூட்டணி கட்சிகள்..

By Raghupati RFirst Published Jan 29, 2022, 12:32 PM IST
Highlights

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

2011ம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் ஒன்பது மாத திமுக அரசின் ஆட்சியை உரசிப் பார்க்கும் முதல் தேர்தலாக இருக்கும் என்று தெரிகிறது.

தமிழ்நாட்டில் 2 ஐந்தாண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுகவை வீழ்த்தி பத்தாண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சிக்கு வந்தது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, மாநிலம் தழுவிய ஒரு தேர்தலை சந்திப்பது இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலே முதல் தேர்தலாகும்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மாநராட்சி மேயர், நகராட்சி சேர்மன், பேரூராட்சிதலைவர்களைக் கவுன்சிலர்களால் மறைமுகமாகத் தேர்ந்தெடுக்கும் தேர்தல்களை நடத்தும் வகையில் 2016ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தை திமுக ஆட்சியில் திருத்தம் செய்யவில்லை. இதனால், தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 பேரூராட்சிகள், 490 பேரூராட்சிகளில் உள்ள 12,838 வார்டுகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுகிறது. புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் மேயர், துணை மேயர்கள், நகராட்சி சேர்மன், பேரூராட்சி தலைவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள்.

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. பிப்ரவரி 22ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. கிட்டத்தட்ட பதினைந்து நாட்களுக்குப் பிறகு, உள்ளாட்சித் தலைவர்களுக்கான மறைமுகத் தேர்தல் மார்ச் 4-ம் தேதி நடைபெறுகிறது. இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளையே இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரதிபலிக்கும் என்றால் இது திமுகவுக்கு கௌரவப் பிரச்சினையாக அமையும். 

ஏனென்றால், சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 66 இடங்களில் வெற்றி பெற்று வலுவான எதிர்க்கட்சியாக அமைந்துள்ளது. அதனால், இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், திமுக அனைத்து இடங்களையும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தேர்தல் வியூகங்களை அமைத்து வருகிறது. அதிமுகவை பொறுத்தவரை இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அவர்களுக்கு மிகமுக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகவே கருதப் படுகிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றி விட வேண்டும் என முயற்சியில் அதிமுகவினர் மும்முரம் காட்டி வருகின்றனர்.

குறிப்பாக, பொங்கல் பரிசு தொகுப்பில் ரொக்கப்பணம் வழங்காதது, தரமற்ற உணவு பொருட்கள் விநியோகத்தால் மக்களிடம் ஏற்பட்டுள்ள அதிருப்தி யை ‘பிரம்மாஸ்திரமாக’ பயன்படுத்தி தேர்தல் பிரச்சாரம் செய்ய வும் அதிமுகவினர் திட்டமிட் டுள்ளனர். அதேநேரத்தில், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்களை காட்டிலும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பணபலம், உட்கட்சி பூசல் இல்லாதவர்கள், மக்கள் செல்வாக்கு உள்ள வேட்பாளர் களை இந்த முறை களம் இறக்க அதிமுக தயாராகி வருவதாக அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

திமுகவில் மொத்தம் 77 மாவட்டச் செயலாளர்கள் உள்ள நிலையில், அவர்களுடன் தான் மற்ற கூட்டணி நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். கடந்த 9 மாத திமுக ஆட்சிக்கு மக்கள் ஆதரவு அமோகமாக உள்ளதாலும் எதிர்ப்புகள் பெரியளவில் இல்லை என்பதாலும் அதிகபட்ச இடங்களில் போட்டியிட விரும்புகிறது. குறைவான தொகுதிகளில் போட்டியிட்டால் மாநகராட்சி, நகராட்சி தலைவர் பதவிகள் கிடைப்பது சிரமம் என்பது கூட்டணிக் கட்சிகளின் அச்சமாக இருக்கிறது. 

அனைத்து மேயர் பதவிகளிலும் திமுகவை சேர்ந்தவர்கள் தான் இருக்க வேண்டும் என்பதே திமுக மாவட்ட செயலாளர்களின் விருப்பமாக இருக்கிறது. எந்தவித உத்திரவாதமும் அளிக்க முடியாது. எனவே இப்போது திமுக சார்பில் சொல்லும் சீட் எண்ணிக்கையை தான் கூட்டணி கட்சிகள் ‘ஓகே’ சொல்ல வேண்டும் என்று திமுக தரப்பில் இருந்து கூட்டணி கட்சிகளுக்கு தகவல் தெரிவித்து இருக்கின்றனர். ஆளுங்கட்சியாகவும், பலம் வாய்ந்த கட்சியாகவும் திமுக இருப்பதால் எல்லா கூட்டணி கட்சிகளும் திமுகவின் கணக்குக்கு சரி என்றே சொல்வார்கள் என்று அரசியல் வட்டாரங்களில் கூறுகின்றனர்.

click me!