கொரோனா பரிசோதனையில் பட்டைய கிளப்பும் தமிழ்நாடு.. மத்திய சுகாதாரத்துறை பாராட்டு

By karthikeyan VFirst Published May 8, 2020, 2:40 PM IST
Highlights

கொரோனா பரிசோதனைகள் தமிழகத்தில் அதிகம் செய்யப்படுவதை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பாராட்டியுள்ளார்.
 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 56 ஆயிரத்தை கடந்து 57 ஆயிரத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. 16,790 பேர் குணமடைந்துள்ள நிலையில், 1890 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெய்ன், பிரிட்டன் ஆகிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் இறப்பும் குறைவு, பாதிப்பு எண்ணிக்கையும் குறைவுதான்.

இந்தியாவை பொறுத்தமட்டில் மகாராஷ்டிராவில் பாதிப்பு மிகக்கடுமையாக உள்ளது. மகாராஷ்டிராவில் பாதிப்பு எண்ணிக்கை 18 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. அதற்கடுத்தபடியாக குஜராத்தில் 7000க்கும் அதிகமானோர் பாதிக்கப்ப்பட்டுள்ளனர். டெல்லியில் 5,980 பேரும் தமிழ்நாட்டில் 5409 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்தியாவிலேயே பாதிப்பு மகாராஷ்டிராவில் தான் அதிகமாக உள்ளது. அதற்கடுத்தபடியாக குஜராத்தில் அதிகமாக இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் அந்த மாநிலங்களை விட தினமும் அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அதிகமான பரிசோதனைகளை மேற்கொண்டு, அதிகமான பாசிட்டிவ் கேஸ்களை கண்டறிந்து தனிமைப்படுத்தி சிகிச்சையளிப்பதுதான் கொரோனாவை தடுக்க ஒரே வழி. எனவே அந்தவகையில், அந்த பணியை தமிழக அரசு சிறப்பாக செய்துவருகிறது. 

தமிழ்நாட்டில் கடந்த 4 நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. தினமும் 500க்கும் அதிகமானோருக்கு தொற்றூ கண்டறியப்படுகிறது. அதற்கு, பரிசோதனைகளை அதிகப்படுத்தியதே காரணம். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் 52 கொரோனா பரிசோதனை ஆய்வகங்களை அமைத்து டெஸ்ட்டுகள் தீவிரமாக செய்யப்பட்டுவருகின்றன. 

தினம் தினம் பரிசோதனை எண்ணிக்கை சீரான வேகத்தில் அதிகப்படுத்தப்பட்டுவருகிறது. 10 ஆயிரம் பரிசோதனை என்ற மைல்கல்லை எட்டிய பின்னர், கடந்த சில நாட்களாக 12 ஆயிரம், 13 ஆயிரம், 14 ஆயிரம் என பரிசோதனைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று முன் தினம் 13,281 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், நேற்று அதிகபட்சமாக 14,102 பேருக்கு டெஸ்ட் செய்யப்பட்டது. இதுவரை தமிழ்நாட்டில் 1,92,574 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவை தடுத்து விரட்டுவதில் முக்கியமான பணியே, அதிகமான பரிசோதனைகளை மேற்கொள்வதுதான். அதை தமிழக அரசு சிறப்பாக செய்துவருகிறது. இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் காணொலி மூலம் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், தமிழ்நாட்டில் அதிகமான கொரோன பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு பாராட்டு தெரிவித்தார். 

அதேபோல தமிழ்நாட்டில் மற்ற மாநிலங்களை விட இறப்பு விகிதமும் மிகக்குறைவு. இதுவரை 5409 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 37 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். 1547 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 3822 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
 

click me!