
தமிழகத்தில் நிலவும் அறிவிக்கப்படாத மின்வெட்டால், சென்னைவாசிகள் மட்டுமின்றி, கிராம மக்களும் அவதிப்பட்டு வருகின்றனர் என விஜயகாந்த் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- தமிழகத்தில் நிலவும் அறிவிக்கப்படாத மின்வெட்டால், சென்னைவாசிகள் மட்டுமின்றி, கிராம மக்களும் அவதிப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக, சென்னையில் ஆங்காங்கே மாலையில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுகிறது. இதேபோல, கிராமங்களிலும் விவசாயத்துக்கு தண்ணீர் பாய்ச்ச மின்சாரம் இல்லாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்தாலே மின்வெட்டு இருக்கும் என்ற கருத்து மக்களிடையே இருக்கிறது. எனவே, தமிழக அரசு இதில் உடனடியாக கவனம் செலுத்தி, தமிழகத்தை மின் மிகை மாநிலமாக மாற்ற வேண்டும்.
கொரோனா ஊரடங்கால் பொருளாதார நெருக்கடியில் சிக்கி மக்கள் தவித்து வருவதால், மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும். மேலும், உயர்ந்து வரும் மின் கட்டணத்தைக் குறைத்து, மக்களுக்கு உதவ வேண்டும் என விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.