உடுமலை சங்கர் சாதி ஆணவப் படுகொலை வழக்கில் தீர்ப்பு..!! போராட்டத்தில் குதித்த தீண்டாமை ஒழிப்பு முன்னணி..!!

By Ezhilarasan BabuFirst Published Jun 22, 2020, 3:05 PM IST
Highlights

உடுமலை சங்கர் சாதி ஆணவப் படுகொலை மேல்முறையீட்டு வழக்கில், சென்னை உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு, முன்னணி தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:

உடுமலை சங்கர் சாதி ஆணவப் படுகொலை மேல்முறையீட்டு வழக்கில், சென்னை உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு, முன்னணி தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:- பட்டியல் சாதியினர் மீதான வன்கொடுமைத் தாக்குதல்களில் நீதிமன்றத் தீர்ப்புகள் கவலையளிக்கும் வகையில் உள்ளது. 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13 ஆம் தேதி, உடுமலை பேருந்து நிலையத்தில் இருந்து வெளியில் வந்த சங்கர், கவுசல்யா இருவரையும், பட்டப்பகலில் கூலிப்படையினர் சரமாரியாக வெட்டியதில் சங்கர் மருத்துவமனையில் உயிரிழந்தார். கூலிப்படையை ஏவி சங்கரைப் படுகொலை செய்த கவுசல்யாவின் தந்தை, தாய், அவரது உறவினர்கள் மற்றும் கூலிப்படையினர் என மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி உள்ளிட்ட மூவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு, தந்தை உள்ளிட்ட 6 பேருக்குத் தூக்குத் தண்டனையும், மற்றவர்களுக்கு சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த வழக்கு திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் 2 ஆண்டுகளாக நடந்த நிலையில், நீதியரசர் அலமேலு அவர்கள் தீர்ப்பு வழங்கினார். சாதி ஆணவப் படுகொலையில் குறுகிய காலத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு இது. அரசின் சார்பில், கவுசல்யாவின் தாய் உள்ளிட்ட மூவரின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. தூக்குதண்டனைக் குற்றவாளிகளும் மேல்முறையீடு செய்தனர்.இந்த வழக்கில் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும், மற்ற 5 பேரின் தூக்குத் தண்டனையும், ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ளது. 

அதுமட்டுமின்றி, தாய் அன்னலட்சுமி உள்ளிட்ட மூவரின் விடுதலையை எதிர்த்த அரசின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.இந்த வழக்கில், உடனடியாக தமிழக அரசு, உரிய வலுவான, சான்றுகளைத் தந்து உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்திட வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தமிழக அரசை வலியுறுத்துகிறது.இதனை வலியுறுத்தி, நாளை (23.6.2020) செவ்வாய் காலை 10.30 மணிக்கு, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிய, தலித்திய, பெரியாரிய அமைப்புகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்திட தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் திருப்பூர் மாவட்டக்குழுவால் முடிவு செய்யப்பட்டுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது. 
 

click me!