
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் பாஜகவின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனின் காரை பெண் ஒருவர் தனி ஆளாக வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்படும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி குமரரெட்டிபுரம் உள்ளிட்ட 18 கிராமங்களை சேர்ந்த மக்கள், கடந்த 79 நாட்களாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையினை மூட வாய்ப்பில்லை என மத்திய இணையமைச்சர் திரு. பொன். ராதாகிருஷ்ணன் கூறியிருப்பது, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை கோபமடைய செய்துள்ளது.
இதனிடையே, தூத்துக்குடி விமான நிலையம் வந்த பாஜகவின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனின் காரை தனி ஆளாக வழிமறித்த பெண் ஒருவர், ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக பாஜகவினர் பேசக் கூடாது என்றும் ஆலையை மூட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கோஷம் எழுப்பினார்.
இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் அந்தப் பெண்ணை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தினர். ஆனால் ஒத்தையில நின்னு நேருக்கு நேர், தமிழிசையை அந்தப் பெண் கேள்வி கேட்டது அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.