
தூத்துக்குடி ப்ரைன் நகரில் இன்று அதிகாலை ஒயின் ஷாப்புக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததையடுத்து அங்கு பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து அங்கு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
காயம் அடைந்தவர்களில் நேற்று ஒருவர் இறந்தார். மேலும் நேற்று நடந்த சம்பவத்தில் போலீசார் மீண்டும் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் இறந்ததையடுத்து சாவு எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது. இந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்தவரில் செல்வ கணேஷ் என்பவர் இன்று உயிரிழந்துள்ளார். இதனால் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்து உள்ளது.
தூத்துக்குடியில் கலவரம் பரவிடாமல் தடுப்பதற்காக 5 நாட்களுக்கு இணையதள சேவை முடக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து துப்பாக்கி சூடு சம்பவத்தினை கண்டித்து பல்வேறு இடங்களில் சாலை மறியல் மற்றும் எதிர்ப்பு போராட்டங்கள் நடந்து வந்தன.
துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் உடல் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருப்பதால் அங்கு உறவினர்கள் குவிந்துள்ளனர். இதையடுத்து 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். வன்முறை எதுவும் பரவாமல் தடுப்பதற்காக துப்பாக்கி ஏந்திய போலீசாரும் பாதுகாப்பில் ஈடுபட்டு உள்ளனர்.
ஆனாலும் ஆங்காங்கே திடீர் திடீர் என தீ வைப்பு சம்பவங்கள் நடந்து வருகின்றன. இன்று அதி காலை ப்ரைன் நகரில் உள்ள ஒயின் ஷாப் ஒன்றுக்கு மர்ம நபர்கள் சிலர் தீடீரென தீ வைத்துவிட்டு தப்பியோடினர்.
இதையடுத்து அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. நூற்றுக்கணக்கான போலீசார் அப்பகுதியிவ் குவிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடியே சுடுகாடாக மாறி இருக்கும்போது ஒயின் ஷாப் ஒரு கேடா என யாரோ தீ வைத்துவிட்டார்கள் என அங்கிருந்த மக்கள் பேசிக் கொண்டனர்.