
துணை முதலமைச்சர் ஒபிஎஸ், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் இடையே சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது. சுமார் அரைமணி நேரம் நடைபெற்ற விவாத்தின் பேச்சை அவைக்குறிப்பில் நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.
தமிழக சட்டப்பேரவை நேற்று முன் தினம் தொடங்கி வரும் 12 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதன்படி இன்று காலை சட்டப்பேரவை தொடங்கியது.
இதில் கேள்விபதில் நேரங்களில் எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. அதற்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.
ஆர்.கே.நகரில் சுயேட்சையாக தேர்தலில் நின்று வெற்றி பெற்ற டிடிவி தினகரனும் இந்த பேரவையில் கலந்து கொண்டு கேள்வி எழுப்பி வருகிறார்.
அந்த வகையில் நெற்று 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி 18 எம்.எல்.ஏக்கள் நீக்கம் செய்யப்பட்ட நிலையில் மெஜாரிட்டி அரசாகவே செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.
இதற்கு பதிலளிக்க முற்பட்ட டிடிவி தினகரனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. அப்போது டிடிவி தினகரன் கோபப்பட்டு வெளிநடப்பு செய்தார்.
இந்நிலையில் இன்று மீண்டும் அவையில் சசிகலா குடும்பம் குறித்தும் பெரும்பான்மை குறித்தும் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் விமர்சித்ததாக தெரிகிறது.
இதையடுத்து பதிலடி கொடுக்கும் வகையில் டிடிவி தினகரன் பேச முற்பட்டார். ஆனால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால் ஒபிஎஸ்க்கும் தங்கமணிக்கும் டிடிவி தினகரனுக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
சுமார் அரைமணி நேரம் நடைபெற்ற விவாதத்தை அவை குறிப்பில் இருந்து நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதைதொடர்ந்து டிடிவி தினகரன் வெளிநடப்பு செய்தார்.