
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு எப்படி இருந்தாலும், அதை ஒதுக்கி வைத்து விட்டு 18 தொகுதிகளிலும் தேர்தலை சந்திக்க டி.டி.வி.தினகரன் குரூப் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும் என நினைத்திருந்த தினா தரப்பு, இரு மாறுபட்ட தீர்ப்பால் மிகவும் அப்செட் ஆனது. இதைத் தொடர்ந்து தான் உச்சநீதிமன்றத்துக்கு இந்த வழக்கை அவர்கள் கொண்டு சென்றனர்.
உச்சநீதிமன்றமும் தினகரன் தரப்பு கேட்டுக் கொண்டதைப் போல் நீதிபதி விமலாவை மாற்றிவிட்டு நீதிபதி சத்ய நாராயணனை நியமித்தது. இந்த தீர்ப்பு டி.டி.வி.தினகரனுக்கு சற்று ஆறுதலாக இருந்தாலும், தற்போது அவர் தனது மொத்த பிளானையும் மாற்றி விட்டார் என்கிறது அமமுக வட்டாரம்.
அதாவது 18 எம்எல்ஏக்கள வழக்கின் தீர்ப்பு எப்படி வந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் அடுத்த லெவலுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். தீர்ப்பு தங்களுக்கு பாதகமாக வந்தால் தொடர் சட்டப் போராட்டதை நிறுத்திவிட்டு 18 தொகுதிகளிலும் தேர்தலை எதிர்கொள்வதுதான் அந்த திட்டம்.
இதையடுத்து வரும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில் தொகுதி பொறுப்பாளர்களை நியமிக்கும் பணிகள் தொடங்கியுள்ளதால் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் உற்சாகத்துடன் களமிறங்கியுள்ளனர்.