’இதயங்களை பிரிப்போம்...’ மு.க.ஸ்டாலினுக்கு முட்டுச்சந்துக்கு வழிகாட்டும் பிரசாந்த் கிஷோர்..!

By Thiraviaraj RMFirst Published Jan 2, 2021, 11:40 AM IST
Highlights

 திமுக ஆரம்பிக்கப்பட்டு பிராமண எதிர்ப்பு உணர்வுகளில் வளர்ந்தது. ஆனால், ஸ்டாலின் அதற்கு நேர்மாறாக இருக்கிறார். ஸ்டாலின், பிரசாந்த் கிஷோரை நம்பினால், முட்டுச் சந்துக்குள் விட்டுவிடுவார்

சென்னையில் வரும் 6ஆம் தேதி திமுக சிறுபான்மை நல பிரிவு சார்பில் மாநாடு நடைபெற உள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில், சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும் இந்த மாநாட்டிற்கு, "இதயங்களை இணைப்போம்" என பெயரிடப்பட்டுள்ளது.  இந்நிலையில், ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசியை, திமுகவின் சிறுபான்மை நல பிரிவு மாநிலச் செயலாளர் மஸ்தான், ஐதராபாத்தில் சந்தித்ததாக தகவல் வெளியானது.

திமுக சிறுபான்மை நல பிரிவு சார்பில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்க வருமாறு, ஓவைசிக்கு அழைப்பு விடுத்ததாக தகவல் பரவியது. இதற்கு தி.மு.க. சிறுபான்மை நல உரிமைப் பிரிவுச் செயலாளர் மஸ்தான் மறுப்பு தெரிவித்துள்ளார். மாநாட்டில் பங்கேற்க எப்போதும் போல் தி.மு.க.வின் தோழமை கட்சித் தலைவர்கள் மட்டுமே சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டுள்ளனர் என மஸ்தான் அறிக்கை மூலம் விளக்கம் அளித்துள்ளார். சில தொலைக்காட்சி சேனல்களில்  வரும் செய்திகள் பொய்யானவை என அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், ஐதராபாத்தில் ஒவைசியை சந்தித்து மஸ்தான் அழைப்பு விடுத்த புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகி இருக்கின்றன. இது தவிர, திமுகவை சேர்ந்த மூத்த தலைவர் டி.ஆர்.பாலு, ஒவைசியுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். 

இதுகுறித்து திமுக சீனியர் ஒருவர் கூறுகையில், ‘’சாதாரண நபருக்கு கூட ஒவைசி வாக்குகளைப் பிரிப்பவர் என்பது தெரியும். அவருடைய அனைத்து முயற்சிகளும் எப்போதும் பாஜகவுக்கு உதவுகின்றன. திமுக மாநாட்டிற்கு அவரை அழைப்பதன் மூலம், ஸ்டாலின் திமுகவின் நீண்டகால நம்பகமான கூட்டணி கட்சிகளான சிறுபான்மை கட்சிகளை உதாசினப்படுத்துகிறார் என்கிறனர். ஒவைசி ஒரு உருது பேசும் இஸ்லாமியர். அவருக்கு தமிழ் பேசும் முஸ்லிம்களிடமிருந்து ஒரு வாக்கு கூட கிடைக்காது.

ஒரு பிஹாரியை சேர்ந்த பிரஷாந்த் கிஷோருக்கு தமிழ்நாடு பற்றி என்ன தெரியும்? தமிழர்கள் ஒரு தனி இனம். நமது கலாச்சாரம் பல நூற்றாண்டுகளுக்கு முந்தையது. பாஜக/ஆர்.எஸ்.எஸ். போன்ற கட்சிகள் நம் மாநிலத்தில் காலடி வைக்க  முடியாமல் போவதற்கு இது தான் காரணம். ஒரு பிஹாரி பிராமணருக்கு தமிழக வாக்காளர்களை எவ்வாறு கையாள்வது என்று தெரியும் என ஸ்டாலின் நினைக்கிறாரா? 2014 நரேந்திர மோடிக்கு தேர்தல் பிரச்சாரத்தில் பிரசாந்த் கிஷோர் பணியாற்றி உள்ளார். 2014 ல் பாஜகவின் வெற்றிக்காக உழைத்து இந்த நாட்டை நாசமாக்கிய ஒருவர் திமுகவுக்கு விசுவாசமாக இருப்பாரா? திமுக, கள அறிவைக் கொண்ட அதிக அறிவார்ந்த தலைவர்களைக் கொண்டுள்ளது. ஆனால், ஸ்டாலின் அவர்களை நம்பவில்லை, பிஹாரில் இருந்து வந்தவரை நம்புகிறார். தேர்தலில் ஒரு மந்திரக்கோலால் வெல்ல முடியும் என்று ஸ்டாலின் நினைக்கிறார்.

திமுகவின் ஏழை பணியாளர்கள் கடுமையாக உழைத்து கட்சிக்காக பாடுபடுகையில், ஸ்டாலின் கோடிக்கணக்கான திமுக கட்சி பணத்தை ஒரு பிரஷாந்த் கிஷோருக்கு கொடுக்கிறார். திமுக ஆரம்பிக்கப்பட்டு பிராமண எதிர்ப்பு உணர்வுகளில் வளர்ந்தது. ஆனால், ஸ்டாலின் அதற்கு நேர்மாறாக இருக்கிறார். ஸ்டாலின், பிரசாந்த் கிஷோரை நம்பினால், முட்டுச் சந்துக்குள் விட்டுவிடுவார்’’ என்கிறார்கள். 

click me!