
தினகரன் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, தமிழக அமைச்சர்கள் சிலரும் கைதாவார்கள் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தமது முகநூலில் பதிவிட்டு இருந்தார்.
அதை மெய்ப்பிக்கும் வகையில், அமைச்சர் காமராஜ் மீதான பண மோசடி வழக்கில், இன்னும் ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை என்று கேட்ட உச்சநீதி மன்ற நீதிபதி, இந்த வழக்கை சி.பி.ஐ க்கு மாற்ற வேண்டுமா? என்றும் எச்சரித்துள்ளார்.
இதை அடுத்து அவர் மீது எந்த நேரமும் பண மோசடி வழக்கு பதிவு செய்யப்படலாம் என்றும், அவ்வாறு வழக்கு பதிவு செய்யப்படும் போது, அவர் அமைச்சர் பறிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் குமார் என்பவர், சென்னையில் உள்ள தமது வீட்டில் குடி இருந்தவர்களை காலி செய்து தருவதற்காக, அமைச்சர் காமராஜுக்கு கடந்த ஆண்டு தேர்தலுக்கு முன்னர் 30 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.
ஆனால், அமைச்சர் காமராஜ், வீட்டில் குடி இருந்தவர்களை காலி செய்து கொடுக்கவில்லை. அதற்காக வாங்கிய பணத்தையும் திருப்பி கொடுக்க வில்லை.
இது தொடர்பான வழக்கை நேற்று விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி, அமைச்சர் காமராஜ் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்கிறீர்களா அல்லது வழக்கை சி.பி.ஐ க்கு மாற்றட்டுமா? என எச்சரித்தார்.
இதனால் பண மோசடி வழக்கில் அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டிய நிலையில் உள்ளது காவல் துறை. ஏற்கனவே, வருமான வரித்துறை அதிகாரிகள் கொடுத்த புகாரில், அமைச்சர் காமராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால், தினகரனுக்கு நெருக்கமான அமைச்சர் காமராஜின் பதவி விரைவில் பறிபோகும் என்று கூறப்படுகிறது.