+2 பொதுத்தேர்வை நடத்தலாமா?... பெற்றோர்களே உங்கள் கருத்தை பதிவு செய்ய தமிழக அரசின் அசத்தல் ஏற்பாடு...!

By Kanimozhi PannerselvamFirst Published Jun 2, 2021, 3:17 PM IST
Highlights

கொரோனா பரவல் காரணமாக பெற்றோர்கள் தங்களுடைய கருத்துக்களை ஆன்லைன் மூலமாக தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

கொரோனா பெருந்தோற்றைக் கருத்தில் கொண்டு சிபிஎஸ் இ பொதுத்தேர்வை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யலாமா? என்பது குறித்து இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனையில் அமைச்சர் அன்பில் மகேஷ்,  தலைமைச் செயலாளர் இறையன்பு, முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன், பள்ளிக்கல்வி செயலர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார், தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ்,  +2 பொதுத்தேர்வை குறித்து முடிவு எடுக்கும் முன்பு கல்வியாளர்கள், மருத்துவ நிபுணர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், மாணவர் அமைப்பினர், ஆசிரியர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தி, அவர்களுடைய கருத்துக்களை 2 நாட்களுக்குள் தெரிவிக்கும் படி முதலமைச்சர் கூறியுள்ளார். அதேபோல் இரண்டு நாட்களுக்குள் மற்ற மாநிலங்களின் முடிவையும் அறிந்து கொண்டு, இறுதி முடிவை அறிவிக்க உள்ளோம் என்றும் தெரிவித்திருந்தார். 

காணொலி காட்சி வாயிலாக மருத்துவ நிபுணர்கள், கல்வியாளர்கள், மாணவர் அமைப்பினர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி, அவர்களுடைய கருத்துக்களை பதிவு செய்ய பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதே சமயத்தில் தங்களுடைய பிள்ளைகளின் தேர்வு குறித்து குழப்பத்தில் இருக்கும் பெற்றோர்களிடம் கருத்து கேட்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக பெற்றோர்கள் தங்களுடைய கருத்துக்களை ஆன்லைன் மூலமாக தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
 

click me!