திருப்பூர் மாநகரில் 22 வயது பெண்ணுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் 55 வது வார்டில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. திருப்பூர் மாநகராட்சியில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே நகர்புற உள்ளாட்சி தேர்தலில் இடப்பகிர்வு இறுதி செய்யப்பட்டுள்ளது.
மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் 5 வார்டுகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 25 , 30 , 48 , 51 , 55 ஆகிய 5 வார்டுகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த 5 வார்டுகளில் காங்கிரஸ் கட்சி சார்பில் 25 வது வார்டில் பூபேஷ் , 30 வது வார்டில் முத்துலட்சுமி , 48 வது வார்டில் விஜயலட்சுமி , 51 வது வார்டில் செந்தில்குமார் , 55 வது வார்டில் தீபிகா ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சியில் காங்கிரஸ் கட்சிக்கான இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில் , பேரூராட்சி மற்றும் நகராட்சிகளில் இன்னும் இறுதியாகாத நிலை உள்ளது. 22 வயது இளம்பெண் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 22 வயது ஆன தீபிகா அப்புக்குட்டி கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தான் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
இவருடைய தாய் விசாலாட்சி அதிமுக கட்சியில் திருப்பூர் மாநகரின் மேயராக பதவி வகித்தார். தமிழ்நாடு பிரியதர்ஷினி காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளராக தீபிகா அப்புக்குட்டி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் கட்சியில் எப்பொழுதும் சீனியர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்ற நிலையில், 22 வயது பெண்ணுக்கு சீட் கொடுத்து இருப்பது பாராட்டை பெற்றிருக்கிறது.