ஏற்கனவே வீசிய தானே புயலுக்கே இன்னும் நிவாரணம் தரவில்லை - துரைமுருகன் சரமாரி கேள்வி!

By manimegalai aFirst Published Nov 23, 2018, 12:40 PM IST
Highlights

மத்திய அரசு கணக்கீடு இல்லாமல் நிதி அளிக்காது. ஏற்கனவே வீசிய தானே புயலுக்கே இன்னும் நிவாரணம் வரவில்லை என திமுக பொருளாளர் துரைமுருகன் கூறினார்.

மத்திய அரசு கணக்கீடு இல்லாமல் நிதி அளிக்காது. ஏற்கனவே வீசிய தானே புயலுக்கே இன்னும் நிவாரணம் வரவில்லை என திமுக பொருளாளர் துரைமுருகன் கூறினார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதிக்குட்பட்ட சேண்பாக்கத்தில் திமுக சார்பில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது.  இதில் கலந்து கொண்ட திமுக பொருளாளர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது.

கஜா புயல் தஞ்சை உள்பட 7 மாவட்டங்களில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. பயிர்கள், கால்நடைகள், வீடுகள் அனைத்து சேதமானதால், மக்களின் வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் அதை சரிசெய்ய எவ்வளவு நிதி தேவைப்படும், மக்களுக்கு உணவு, தங்குமிடம் ஆகியவற்றை அமைத்து தர எவ்வளவு நிதி தேவைப்படுகிறது என்பதை கணக்கீடு செய்வது என்பது சாதாரண வேலையில்லை.

அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்கள் கணக்கீடு செய்தார்கள் என கூறுகிறார்கள். ஆனால், தலைமை செயலாளரோ, வருவாய்த்துறை செயலாளரோ சேத மதிப்பு குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை. இதை கணக்கீடு செய்யாமல் ஒப்புக்கு சப்பானியாக தமிழக அரசு மத்திய அரசிடம் நிதி கேட்டுள்ளது.

மத்திய அரசு கணக்கீடு இல்லாமல் நிதி அளிக்காது. ஏற்கனவே வீசிய தானே புயலுக்கே இன்னும் நிவாரணம் வரவில்லை. தற்போது வீசிய புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பகுதி மக்கள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப 10 ஆண்டுகளுக்கு மேலாகும்.

பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமரோ, மத்திய உள்துறை அமைச்சரோ, நிதியமைச்சரோ எட்டிக்கூட பார்க்கவில்லை. மத்திய அரசுக்கு தமிழகம் என்று ஒரு மாநிலம் இருப்பதே தெரியவில்லை.

நிவாரண நிதி கேட்பதை தமிழக அரசு தைரியமாக கேட்க வேண்டும். கஜா புயலை திமுக. அரசியலாக்கவில்லை. பாதிக்கப்பட்ட இடங்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான் முதலில் சென்று பார்வையிட்டார். ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஹெலிகாப்டரில் பறந்து விட்டு வந்துவிட்டார். அவர் கீழே இறங்கி நடந்து சென்று பார்த்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

click me!