எம்.ஜி.ஆர் சிலை மீது காவி அடித்தவர்கள் பாவிகள் அல்ல; பக்தர்கள்... அக்கறையில்லாத திமுக..!

By Thiraviaraj RMFirst Published Jul 25, 2020, 11:10 AM IST
Highlights

இவற்றில் எதையும் திமுகவால் ஏன் செய்ய முடியாமற் போனது..? அதிமுக ஆட்சியில் மட்டும் எப்படி நிறைவேறியது...? சாராயக் கடைகளைத் திறந்ததில் இருந்த ஆர்வம், அக்கறையை - சாமான்யர்களின் படிப்பில் காட்டி இருக்கலாமே..! யார் தடுத்தார்..? 

அதிமுகவும்- தமிழகமும்: என்ன செய்தார் எம்.ஜி.ஆர்.?

எம்.ஜி.ஆர்- இந்த மூன்றெழுத்துச் சொல்லுக்குத் தமிழ் மக்களிடம் இருந்த அன்பும், மரியாதையும் எழுத்தில் விவரிக்க முடியாதது. சாதி, மதம் கடந்து எல்லா மக்களின் உறவாக, 'எங்க வீட்டுப் பிள்ளை'யாக இருந்தவர் எம்.ஜி.ஆர். அப்படி அவர் என்னதான் செய்து விட்டார்...? 

விரிவாகப் பார்ப்போம். அதற்கு முன்னதாக... இந்தக் கட்டுரை எழுதுகிற கணத்தில் ஒரு செய்தி வந்துள்ளது. எம்.ஜி.ஆர். சிலைக்குச் சிலர் காவி உடை அணிவித்து விட்டார்களாம்; 'விவாதம்' நடத்துவதற்கு ஒரு 'விஷயம்' கிடைத்து விட்டது! பல ஆண்டுகளுக்கு முன்னமே எம்.ஜி.ஆருக்குக் கோயில் எழுப்பி, 
ஆண்டு தோறும் இருமுடி கட்டிக் கொண்டு போய் நேர்த்திக் கடன் ஆற்றுகிற எம்.ஜி.ஆர். பக்தர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். 

இதே போன்று யாரும், அவரைத் தமக்கு உரியவராக எப்படி வேண்டுமானாலும் வரித்துக் கொள்ளலாம். தவறு இல்லை. ஒரு உதாரணத்துக்கு சொல்கிறேன்... 
இஸ்லாமியர் ஒருவர் என்னை முஸ்லிம் என்று சொன்னால், அல்லது கிருத்துவர் யாரேனும் என்னை கிருத்துவர் என்று அழைத்தால், கட்டாயம் நான் மகிழத்தான் செய்வேன். தங்களில் ஒருவனாக என்னைப் பார்க்கிறார் என்றால், என் மீது அவர் எத்தனை அன்பு கொண்டு இருக்க வேண்டும்...? 

பதிலுக்கு அவர் மீது நானும் அன்பு பாராட்டுவதா...? அல்லது, என்னை எப்படி அவ்வாறு சொல்லலாம் என்று வம்புக்குப் போவதா..? முதலாவதைச் செய்தால் நான் மனிதன்; இரன்டாவது என்றால், நாம் மனிதனாக இருக்கவே அருகதை அற்றவன் என்று பொருள். இப்படித்தான் எம்.ஜி.ஆருக்குக் காவி அணிவித்ததையும் பார்க்கிறேன். அவரவர் கண்களுக்கு அவரவருக்கு ஏற்றபடி எம்.ஜி.ஆர். தெரிந்தால், நாம் என்ன செய்ய முடியும்..? இப்படிச் சொல்வதால் அந்த சம்பவத்தை வரவேற்பதாகப் பொருளில்லை; 'தள்ளி விட்டு' 'ignore'செய்து விட்டுப் போகலாம்.

இவற்றுக்கு எல்லாம் அளவுக்கு அதிகமான முக்கியத்துவம் தருவதால்தான், இத்தகைய சம்பவங்கள் நடைபெறவே செய்கின்றன. 'ஒதுக்கி விட்டு' போனால்..? 
தானாக மறைந்து விடும். இதுதான் உண்மையில் எம்.ஜி.ஆர். ஸ்டைல். இதற்கு மேல் இந்த சம்பவம் குறித்து சொல்வதற்கு ஏதும் இல்லை. இனி... எம்.ஜி.ஆர். என்ன செய்தார்..? பார்க்கலாம். 1977இல் மக்கள் திலகம் எம் ஜி ஆர், பொறுப்புக்கு வந்த உடன், சைக்கிளில் 'டபிள்ஸ்' போகக் கூடாது என்று இருந்த அரதப் பழசான சட்டத்தை ரத்து செய்தார். இதைப் பல பேர் சொல்லி விட்டார்கள். இன்னும், என்னவெல்லாம் செய்தார் பார்ப்போம்.

கிராமத்தில் வாழ்ந்த ஏழை மக்களுக்கு, பேருந்துப் பயணம் ஏறக்குறைய எட்டாக் கனியாக இருந்தது. சிறுவர்கள், முதியோர், நோயுற்றோர், கர்ப்பிணிப் பெண்கள்... யாராக இருந்தாலும், 'மெயின் ரோடு' வரைக்கும் சில மைல் தூரம் நடந்து போய்த்தான் 'பஸ்' பிடிக்க முடியும். தான் ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டிலேயே, எல்லா கிராமங்களுக்கும் 'உள்ளே' போய் வருகிற, 'டவுன் பஸ்' விட்டார் எம் ஜி ஆர். அதிலும், அரசு பஸ்கள் - குறைந்த கட்டணத்தில்.
இன்றைக்கும், பாமரர்களின் அன்றாடப் பிழைப்புக்கு, டவுன் பஸ் பெரிதும் உதவிகரமாக இருக்கிறது. டவுன் பஸ்களில் இலவசமாகப் பயணிக்க, மாணவ மாணவியர் அனைவருக்கும் 'பாஸ்' வழங்கப் பட்டது. 

இதன் மூலம், நகரத்துக்குச் சென்று உயர்கல்வி படிக்கிற 'வசதி' ஏற்பட்டது. பெருந்தலைவர் காமராசர் ஐயா காலத்துக்கு முன்பு வரை, 'அஞ்சாங் கிளாஸ்' படித்து இருந்தாலே 'பெரிய படிப்பு' படிச்சவரா இருந்தாங்க; காமராசர் ஐயா பாடுபட்டு 3கி.மீ தூரத்துக்குள்ள, பள்ளிக் கூடங்கள் இருக்கிற மாதிரி, ஆயிரக் கணக்குல 'ஸ்கூல்ஸ்' கொண்டு வந்தாங்க; 'எட்டாங் கிளாஸ்' படிக்கிறது சர்வ சாதாரணமா ஆயிருச்சு. எம்.ஜி.ஆர். வந்தாரு... டவுன் பஸ் விட்டாரு... 
'எஸ்.எஸ்.எல்.சி.' கூட ஒண்ணுமே இல்லைன்னு 'காலம்' மாறிப் போச்சு. தெருவுக்குத் தெரு, வீட்டுக்கு வீடு.. 'டிகிரி' படிச்சவங்க வர ஆரம்பிச்சாங்க. 

'முதல் தலைமுறைப் பட்டதாரி' (First Generation Graduate) என்று சொல்கிறோமே... இவர்கள் ஆயிரக் கணக்கில், லட்சக் கணக்கில் தமிழ்நாடு முழுவதும் உருவானார்களே... அது யார் காலத்தில்..? அது எப்படி சாத்தியம் ஆயிற்று..? சொல்லும் போதே உடல் சிலிர்க்கிறது. ஒரு சதம் கூட இல்லாத பட்டதாரிகளின் எண்ணிக்கை, எம்.ஜி.ஆர். வந்த பிறகு, பல மடங்கு உயர்ந்தது; 'எம் பையன் காலேஜ்ல படிக்கிறான்..'; 'எம் பொண்ணு 'பி.ஏ.' முடிச்சுட்டா...' என்று பெருமையாகப் பெற்றோர் சொன்னதை சின்னஞ்சிறு கிராமங்களில் கூடக் கேட்க முடிந்தது.  

சத்துணவு போட்டு டவுன் பஸ் விட்டு இலவச பாஸ் குடுத்து, 'புள்ளைங்க' படிக்கறத்துக்கு வழி பண்ண குடுத்த 'மவராசன்' அவர். 1969 முதல் 1976 வரை ஆட்சியை வைத்துக் கொண்டு இருந்த ஏழு ஆண்டுகளில், இவற்றில் எதையும் திமுகவால் ஏன் செய்ய முடியாமற் போனது..? அதிமுக ஆட்சியில் மட்டும் எப்படி நிறைவேறியது...? சாராயக் கடைகளைத் திறந்ததில் இருந்த ஆர்வம், அக்கறையை - சாமான்யர்களின் படிப்பில் காட்டி இருக்கலாமே..! யார் தடுத்தார்..? 

திமுகவுக்கு 'மனசு இல்லை'; எம்.ஜி.ஆருக்கு இருந்தது. அவ்வளவுதான். 'இவங்களுக்கு என்ன செய்யலாம்..?' என்கிற சிந்தனை எப்போதும் அவரது மனதில் 
ஓடிக் கொண்டே இருந்தது. இந்த அணுகுமுறைதான் எம்.ஜி.ஆர். என்கிற மாபெரும் மக்கள் தலைவரைத் தனித்துக் காட்டுகிறது. அவரின் புகழுக்கு சிகரம் அமைத்தது - 'சத்துணவுத் திட்டம்'!

                                                            - பாஸ்கர் கிருஷ்ணமூர்த்தி

                                                                                                                                                                                                                                                                                      (வளரும்...   
 

click me!