நேரில் சந்தித்த தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா... மு.க. ஸ்டாலினுக்கு திருநாவுக்கரசர் அன்பு கோரிக்கை..!

By Asianet TamilFirst Published Sep 28, 2020, 8:10 AM IST
Highlights

தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவை நேரில் சந்தித்தவர்கள், உடனிருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளும்படி காங்கிரஸ், திமுகவினருக்கு தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளராக தினேஷ் குண்டு ராவ் நியமிக்கப்பட்டார். இதனையடுத்து தினேஷ் குண்டுராவ் கடந்த 25-ம்  தேதி சென்னைக்கு வருகை தந்தார். காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம், தலைவர்களுடன் தனிப்பட்ட கூட்டம் எனப் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற தினேஷ் குண்டுராவ், 26-ம் தேதி மாலை திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சென்று சந்தித்தார். அப்போது திமுக சார்பில் பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் கே.என். நேரு உள்ளிட்ட திமுக தலைவர்களும் உடன் இருந்தனர்.


இந்நிலையில் கொரோனா அறிகுறிகள் தென்பட்டதால், ஊர் திரும்பிய தினேஷ் குண்டுராவ் பரிசோதனை செய்துகொண்டார். இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து தன்னோடு தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளும்படியும் ட்விட்டரில் தினேஷ் குண்டு ராவ் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும் திருச்சி எம்.பி.யுமான திருநாவுக்கரசர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழக காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் தமிழகத்தில் அவரது 2 நாள் சுற்றுப்பயணத்தின்போது நேரில் சந்தித்தவர்கள் நெருக்கமாக சென்று உரையாடியவர்கள், பழகியவர்கள், உடனிருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என காங்கிரஸ், திமுக தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்களை அன்போடு வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.”என்று தெரிவித்துள்ளார்.

click me!