உதய சூரியன் சின்னம் வேண்டாம்..! திமுகவுக்கு விசிக கொடுத்த ஷாக்... பரபரப்பு பின்னணி...!

By Selva KathirFirst Published Mar 13, 2019, 9:57 AM IST
Highlights

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது குறித்து பரிசீலிப்பதாக கூறிய விசிக தற்போது தனிச்சின்னத்தில் போட்டியிட முடிவு செய்து திமுக தரப்புக்கு ஷாக் கொடுத்துள்ளது.
 

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது குறித்து பரிசீலிப்பதாக கூறிய விசிக தற்போது தனிச்சின்னத்தில் போட்டியிட முடிவு செய்து திமுக தரப்புக்கு ஷாக் கொடுத்துள்ளது.

ஒரே ஒரு தொகுதி தான் ஒதுக்க முடியும் என்று கூறியதால் திமுக – விசிக இடையே தொகுதிப்பங்கீட்டில் பெரும் இழுபறி ஏற்பட்டது. இதன் பின்னர் தேமுதிக கூட்டணிக்கு வரவில்லை என்று தெரிந்த பிறகு 2 தொகுதிகளை ஒதுக்க திமுக முன்வந்தது. ஆனால் அதற்கு திமுக இரண்டு நிபந்தனைகளை விதித்தது. முதல் நிபந்தனை திமுக சின்னத்தில் போட்டியிட வேண்டும், 2வது நிபந்தனை திமுக சின்னத்தில் போட்டியிட்டால் தான் தேர்தல் நிதி கொடுக்கப்படும். திமுக சின்னத்தில் போட்டியிட்டால் இரண்டு இடங்கள், தேர்தல் நிதி என்கிற ஆஃபர் திருமாவளவனை கவர்ந்தது. 

இதனால் அவர் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவது குறித்து பரிசீலிப்பதாக கூறினார். உடனடியாக விசிகவுக்கு இரண்டு தொகுதிகளை ஒதுக்கி இழுபறியை முடிவுக்கு கொண்டு வந்தார் ஸ்டாலின். இதனை தொடர்ந்து விசிக முக்கிய நிர்வாகிகளிடம் சின்னம் தொடர்பாக கடந்த சில நாட்களாக திருமா ஆலோசனை நடத்தி வந்தார். திமுக சின்னத்தில் போட்டியிடுவது என்பது நாம் திமுகவிலேயே சேர்ந்ததற்கு ஒப்பாகிவிடும் என்று பலரும் திருமாவிடம் கூறினர். இதில் திருமாவுக்கும் உடன்பாடு இருந்தது. மேலும் திமுக உறுப்பினராகி எம்பி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டுமா? என்கிற எண்ணம் திருமாவுக்கு இருந்துள்ளது. 

அதே சமயம் திமுக சின்னத்தில் நின்றால் தேர்தல் செலவுக்கு பிரச்சனை இல்லை என்கிற விவகாரம் தான் திருமாவை மிகவும் குழப்பிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் திமுக ஒதுக்கும் மற்றொரு தொகுதியை தனக்கு கொடுத்தால் திமுக செலவழிக்கும் பணத்தை விட இரண்டு தொகுதிகளிலும் தான் செலவழிக்க தயாராக இருப்பதாக திருமாவுக்கு மிகவும் நெருக்கமானவரும், பெரும் ரியல்எஸ்டேட் தொழில் அதிபருமான ஒருவர் முன்வந்துள்ளதாக கூறுகிறார்கள். இதனை அடுத்தே தனி சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்திற்கு விசிக தரப்பில் இருந்து கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

திமுகவை பொறுத்தவரை விசிக தங்கள் சின்னத்தில் போட்டியிடும் என்கிற நம்பிக்கையில் இருந்தது. ஆனால் திருமா இப்படி ஒரு முடிவை எடுத்தது அந்த கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகளுக்கு ஷாக் கொடுத்துள்ளது. இது பற்றி ஸ்டாலினிடம் முறையிட்டுள்ளார்கள். அதற்கு பொறுத்திருந்து பார்ப்போம் என்று ஸ்டாலின் பதில் கூறியதாக சொல்லப்படுகிறது. விரைவில் ஸ்டாலினை நேரில் சந்தித்து தனி சின்னத்தில் போட்டி என்கிற தகவலை திருமா தெரிவிப்பார் என்கிறார்கள். 

அதே சமயம் திமுக ஒதுக்கும் 2வது தொகுதியில் போட்டியிட திருமாவுக்கு மிக நெருக்கமான ரவிக்குமார், வன்னி அரசு பெரும் முயற்சி செய்து வருகிறார்கள். இந்த நிலையில் தொழில் அதிபருக்கு அந்த சீட் என்று விசிக வட்டாரத்தில் பேச்சு அடிபடுவது அவர்கள் இருவருக்கும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாக கூறுகிறார்கள். எனவே இந்த விவகாரத்தில் திருமா என்ன செய்யப்போகிறார் என்கிற ஆர்வம் எழுந்துள்ளது.

click me!