தயாநிதி மாறனுக்கு திருமாவளவன் கண்டனம்..! புண்படுத்தி விட்டீர்கள் என வேதனை..!

Published : May 15, 2020, 10:29 AM IST
தயாநிதி மாறனுக்கு திருமாவளவன் கண்டனம்..! புண்படுத்தி விட்டீர்கள் என வேதனை..!

சுருக்கம்

தலைமைச்செயலாளர் குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியது சரி. ஆனால்,அந்தவேகத்தில் 'நாங்கள் தாழ்த்தப் பட்டவர்களா'என்றது அதிர்ச்சியளிக்கிறது. அதில் உள்நோக்கமில்லை; என்றாலும் இம்மண்ணின் மைந்தர்களின் உள்ளத்தைப் பாதித்திருக்கிறது.இது தோழமை சுட்டுதல், என்று திருமாவளவன் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பதால் அவதிக்குள்ளாகி இருக்கும் மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் உதவி வருகின்றனர். திமுக சார்பாக ‘ஒன்றிணைவோம் வா’ திட்டம் அறிமுகபடுத்தப்பட்டு தமிழகம் முழுவதும் நிவாரணப்பணிகள் நடந்து வருகிறது. அத்திட்டத்தின் மூலம் மக்களிடம் இருந்து 1 லட்சம் மனுக்கள் பெற்ற திமுக தலைமை அவற்றை திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, தமிழச்சி ஆகியோர் மூலம் தமிழக தலைமை செயலாளர் சண்முகத்தை சந்தித்து வழங்க அனுப்பியிருந்தது. தலைமைச் செயலாளர் சண்முகத்தை சந்தித்த போது அவர்  தங்களை அவமானப்படுத்தும் விதமாக நடந்து கொண்டதாக திமுக எம்.பி.க்கள் குற்றம் சாட்டினர். 

அதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதி மாறன்  “தலைமைச் செயலாளர் எங்களை மூன்றாம் தரம் மக்களை போல நடத்தினார். நாங்கள் எல்லாம் என்ன தாழ்த்தப்பட்டவர்களா? நாங்கள் அவரைச் சந்தித்தபோது அவரது அறையில் தொலைக்காட்சிப் பெட்டி அலறுகிறது. தொலைக்காட்சி சத்தத்தை கூட அவர் குறைக்காமல் எங்களை அவமானப்படுத்த வேண்டும் என்கின்ற நோக்கத்துடன் நடந்துகொண்டார். திமுக தலைவரின் ஒன்றிணைவோம் வா திட்டத்தைப் பார்த்து அவர் பொறாமைப்படுகிறார்”  என்று கூறியிருந்தார். அதை மறுத்த தலைமை செயலளார் சண்முகம் நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமனின் பேட்டியை குறிப்பெடுத்து கொண்டிருந்ததாக கூறினார்.

 

இதனிடையே தாழ்த்தப்பட்டவர்களா? என தயாநிதி மாறன் குறிப்பிட்டது தான் தற்போது பலத்த சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இதுகுறித்து வேதனை தெரிவித்திருக்கும் திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களுள் ஒருவரான திருமாவளவன் எம்.பி, தலைமைச்செயலாளர் குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியது சரி. ஆனால்,அந்தவேகத்தில் 'நாங்கள் தாழ்த்தப் பட்டவர்களா'என்றது அதிர்ச்சியளிக்கிறது. அதில் உள்நோக்கமில்லை; என்றாலும் இம்மண்ணின் மைந்தர்களின் உள்ளத்தைப் பாதித்திருக்கிறது.இது தோழமை சுட்டுதல், என்று தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். எனினும் திருமாவளவன் திமுக எம்.பிக்களை வன்மையாக கண்டிக்கவில்லை என சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் கிளம்பியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

12,000 அடி உயரத்தில் பதுங்கு குழியில் ஜெய்ஷ் பயங்கரவாதிகள்..! உயிர் பிழைக்க பதுக்கிய அரசி- மேகி..!
ஆளுநரின் தேநீர் விருந்து.. ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கும் திமுக கூட்டணி கட்சிகள்!