
வரும் காலத்தில் உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தலை மறைமுக தேர்தலாக இல்லாமல் மக்களே நேரடியாக தேர்ந்தெடுக்கும் வகையில் மாற்றம் கொண்டு வர வேண்டுமென தமிழக முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் கூறியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினை நேரில் சந்தித்த பின் அவர் இவ்வாறு கூறினார். கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அதிரடியாக அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக திருமாவளவன் அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார்.
நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் 21 மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றியது. மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையில் மேயர் பதவியை தவிர்த்து, துணைமேயர், நகராட்சி, பேரூராட்சி மன்றத் தலைவர் பதவிகள் கூட்டணி கட்சிகளுக்கு வழங்கப்பட்டது. கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு திமுகவினர் ஆதரவளிக்க வேண்டுமெனவும் திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் வலியுறுத்தினார். ஆனால் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் கூட திமுக வினர் போட்டி வேட்பாளர்களை களமிறக்கி அப்பதிவுகளை கைப்பற்றிக் கொண்டனர். இது கூட்டணி கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை கைப்பற்றியவர்களை ராஜினாமா செய்ய வைக்க வேண்டுமென முதல்வர் ஸ்டாலினுக்கு விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் போன்றோர் வலியுறுத்தினர். கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிய இடத்தில் திமுகவினர் போட்டி வேட்பாளராக களம் இறங்கியது கூட்டணி தர்மத்திற்கு எதிரானது என்றும் அவர்கள் ஆதங்கம் தெரிவித்தனர். உடனே இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின், தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுக தலைமை அறிவித்ததை மீறி போட்டியிட்டு வென்றவர்கள் உடனே தங்களது பொறுப்பை விட்டு விலக வேண்டும் என வலியுறுத்தினார். திமுகவுக்கு கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற மூன்றும் முக்கியம்.
இந்த மூன்றில் மிகமுக்கியமானது கட்டுப்பாடுதான். ஆனால் அந்த கட்டுப்பாட்டை சிலர் காற்றில் பறக்க விட்டு தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட பொறுப்புகளில் உட்கார்ந்திருக்கிறார்கள். ஏதோ சாதித்து விட்டது போல நீங்கள் நினைக்கலாம், ஆனால் கழகத் தலைவர் என்ற முறையில் குற்ற உணர்ச்சியால் நான் குறுகி நிற்கிறேன் என்றும், தோழமை உணர்வை காயப்படுத்தி விடக்கூடாதே என்ற உணர்வில் இருக்கிறேன், தலைமை கழகம் அறிவித்தை மீறி, தோழமை கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்றவர்கள் உடனடியாக தங்கள் பொறுப்பை விட்டு விலக வேண்டும். அப்படி இல்லையென்றால் அவர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்தார்.
முதல்வர் ஸ்டாலினின் இந்த செயல் கூட்டணி கட்சியினருக்கு பெரும் ஆறுதலை ஏற்படுத்தியது. அவருக்கு நன்றி தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி பதில் அறிக்கை வெளியிட்டது. கூட்டணி கட்சிகளின் கோரிக்கையை ஏற்று அறிக்கை வெளியிட்டது மட்டுமல்லாமல், திமுகவினரின் செயலை எண்ணி குறுகி நிற்கிறேன் என்ற முதல்வரின் அறிக்கையை கண்டு நாங்கள் உருகி நிற்கிறோம். முதல்வரின் இந்த அறிக்கை அவரது பரந்த உள்ளத்தை, பெருந்தன்மையை, பக்குவமடைந்த முதிர்ச்சியை வெளிப்படுத்துகிறது என திருமாவளவன் தனது அறிக்கையில் கூறியிருந்தார். இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடலூர் துணை மேயர் தாமரைச்செல்வன், ராணிப்பேட்டை நகராட்சி துணைத்தலைவர், திண்டிவனம் நகராட்சி துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் முதல்வர் ஸ்டாலினிடம் அறிமுகம் செய்து வைத்த வாழ்த்து பெற்றார்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய திருமாவளவன், நடந்து முடிந்த மறைமுக தேர்தலில் பல குளறுபடிகள் ஏற்பட்டது. அதனை முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்துச் சென்றோம், முதலமைச்சர் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுக சார்பில் போட்டியிட்டவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என அறிக்கை வெளியிட்டார். இது முதலமைச்சரின் தலைமை பண்பை காட்டுகிறது. விடுதலை சிறுத்தைகளின் சார்பில் அவருக்கு நாங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம், பல இடங்களில் திமுகவினர் வாக்களித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியை வெற்றி பெறச் செய்துள்ளனர். இந்தக் கூட்டணி மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றுள்ளது.
எனவே தற்போது நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையே எங்களுக்கு போதுமானது. இந்நிலையில் வருங்காலத்திலாவது உள்ளாட்சி தேர்தலில் நேரடித் தேர்தலாக நடக்கட்டும். மறைமுகத் தேர்தல் பல குளறுபடிகள் ஏற்படுகிறது எனவே இதைக் கைவிட வேண்டும் என முதல்வர் ஸ்டாலினிடம் நேரடியாக வலியுறுத்தி இருக்கிறோம். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.