சின்னம் தராததால் சினம்... சிதம்பரத்தில் திருமாவளவன் புது முடிவு!

By Asianet TamilFirst Published Mar 20, 2019, 7:03 AM IST
Highlights

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுக, விசிக ஆகிய கட்சிகளுக்கு பழையை சின்னமும் கேட்கும் சின்னமும் ஒதுக்கப்படாததால், இரு கட்சிகளும் கடும் அதிருப்தியில் உள்ளன.
 

திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, சிபிஎம், சிபிஐ, விசிக, கொமதேக, இஜக, இ.யூ.மு.லீக். ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இவற்றில் இந்திய ஜன நாயக கட்சி பெரம்பலூர் தொகுதியிலும் கொமதேக நாமக்கல் தொகுதியிலும் திமுகவின் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுகின்றன. பிற தேசிய கட்சிகளான காங்கிரஸ், சிபிஎம். சிபிஐ, இ.யூ.மு.லீக் ஆகிய கட்சிகள் தங்கள் சின்னத்தில் போட்டியிட உள்ளன. இவை தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் என்பதால், எந்தப் பிரச்னையும் இல்லை.

ஆனால், திமுக கூட்டணியில் இடம் பிடித்துள்ள மதிமுக, விசிக ஆகிய கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெறாத கட்சிகள் என்பதால், சின்னத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றன. இதைத் தவிர்க்கும் வகையில் இக்கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக வற்புறுத்தியது. ஆனால், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றால், அக்கட்சி உறுப்பினர் என்ற அந்தஸ்துதான் கிடைக்கும். எனவே, இக்கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட ஆர்வம் காட்டவில்லை. 

விசிக போட்டியிடும் விழுப்புரம், சிதம்பரம் தொகுதியில் மோதிரம், வைரம், பலாப்பழம் என பல சின்னங்களைக் கேட்டும் விசிகவுக்கு சின்னம் ஒதுக்கப்படவில்லை. இறுதியாக மேசை சின்னம் கேட்டும் இன்னும் கைக்கு வரவில்லை. இதனால், பாரபட்சமாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்று கூறிய திருமாவளன், சின்னம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுவருவதால், விழுப்புரம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் அக்கட்சி வேட்பாளர் ரவிக்குமார் போட்டியிடுவார் என அறிவித்துவிட்டார். மேலும் சிதம்பரம் தொகுதியில் தேர்தல் ஆணையம் ஒதுக்கும் சின்னத்தில் போட்டியிட திருமாவளவன் முடிவு செய்துவிட்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேபோல மதிமுக இடைப்பட்ட காலத்தில் அங்கீகரிக்கப்பட்டிருந்தபோது பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. எனவே அந்தச் சின்னத்தை தேர்தல் ஆணையத்திடம் மதிமுக கேட்டுவருகிறது. மதிமுகவுக்கும் இதுவரை கேட்ட சின்னம் கிடைக்கவில்லை. மாறாக அதிமுக கூட்டணியில் பாமக கேட்ட மாம்பழம், தமாகா கேட்ட சைக்கிள் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளதால், அக்கட்சிகள் தங்களின் பழைய சின்னத்திலேயே போட்டியிட உள்ளன.
 

click me!