
தெளிவான முடிவோடு இருக்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன். சட்டமன்றத்துக்கு இடைதேர்தலோ, உள்ளாட்சியோ, நாடாளுமன்றமோ...எது வந்தாலும் அதில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸின் தோளில் கைபோட்டுக் கொண்டு நின்றே தீருவது என்பது அவரது தீர்க்கமான முடிவாகிவிட்டது. அதற்காக தனது ஈகோக்களை கூட இறக்கி வைத்துவிட்டு வளைந்து கொடுக்க துவங்கியிருக்கிறது இந்த சிறுத்தை.
தலித் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்த வகையில் தங்களோடு எப்போதும் ஒரு தலித் கட்சியை வைத்துக் கொள்ள விரும்பினார் கருணாநிதி. புதியதமிழகம் கிருஷ்ணசாமியை நம்பி நீண்டகால முடிவெடுக்க முடியாது என்பதால் திருமாவை அதிகம் அரவணைத்தார் அவர். திருமாவும் கிட்டத்தட்ட தனது தந்தையை போல் கருணாநிதியிடம் அளவளாவினார். ஆனால் ஸ்டாலினுக்கு திருமாவோடு அவ்வளவு இணக்கம் கிடையாது. கடந்த தேர்தலில் வி.சி.க்கள் மக்கள்நல கூட்டணி தளத்தில் போய் நிற்க காரணமே தி.மு.க.வில் ஸ்டாலினின் கை கருணாநிதியை தாண்டி வலுப்பெற்றதுதான்.
மக்கள் நல கூட்டணியின் படு தோல்வி திருமாவை மீண்டும் தி.மு.க. பக்கம் திருப்பியது. ஆனால அவரது கெட்ட நேரம் கருணாநிதி செயல்பட இயலா நிலைக்கு போயி, ஸ்டாலின் செயல் தலைவராகவே மாறி நின்றார். ஆனாலும் நட்பு முகம் காட்டிய திருமாவை வெச்சு செய்ய துவங்கினர் ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்கள். இதற்கு பதிலடியாக ரஜினிகாந்தின் திடீர் அரசியல் பிரவேச பரபரப்பை கையிலெடுத்து அநியாயத்துக்கு அவரை ஸ்டாலினோடு ஒப்பிட்டு ரஜினியை உயர்த்திப் பேசினார். விளைவு, இணையதள தி.மு.க.வினர் வளைதளத்தில் திருமாவை காய்ச்சி வடித்தனர். பதிலுக்கு வன்னியரசு தலைமையில் ஒரு படை ஸ்டாலினை கிழித்து தொங்கவிட்டது.
இந்த பிரச்னை ஸ்டாலின் - திருமா இருவருக்கும் இடையிலான பிளவை அதிகப்படுத்தியது. ஸ்டாலின் வெளிநாடு சென்றிருந்த நேரமாக பார்த்து கருணாநிதியை திருமா சந்தித்து நலம் விசாரித்ததும் வெறுப்பை மேலும் வளர்த்தது.
இந்நிலையில் இடையில் ஏற்பட்ட அ.தி.மு.க.வின் அரசியல் பரபரப்பால் இருவரும் ஒருவரையொருவர் கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில் சமீபத்தில் இந்திராகாந்தி நூற்றாண்டு விழா மேடையில் இருவரையும் ஒன்றாக அமர்த்தியது தமிழக காங்கிரஸ். அப்போது திருமாவளவன் பல படிகள் இறங்கி வந்து “தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக மிக முக்கியமான அரசியல் முடிவை எடுக்க வேண்டும். உங்களோடு நிற்க காங்கிரஸ் தயாராக இருக்கிறது. நாங்களும் கைகோர்க்கிறோம். இதை அரசியலுக்காகவோ, சுய நலத்தின் பாலோ சொல்லவில்லை. மக்கள் நலனுக்காக சொல்கிறேன்.” என்று இறுக்கத்தை விட்டு வெளிப்படையாகவே பேசி தி.மு.க. கூட்டணியில் துண்டு போட்டுவிட்டார்.
இது அவரது கட்சியினரில் முக்கால்வாசி பேரை ‘நல்ல முடிவு’ என்று சந்தோஷிக்கவும், மீதி பேரை ‘நம் தன்மானத்தை விட்டு அவரை தளபதி என சொல்ல வேண்டுமா! ஏண்ணே இப்படி?’ என்று கடுப்பேறவும் வைத்துள்ளது. ஆனால் திருமாவோ ‘தனி மனிதனாக நான் அசிங்கப்படுவதிலோ, ஈகோவை விட்டு இறங்கிப் போவதிலோ எந்த வருத்தமுமில்லை. நமது இயக்கம் அரசியல் ரீதியில் வளர்ந்து, அதிகாரத்தை பெற வேண்டும். அதுவே முக்கியம்.’ என்று சொல்லி சமாதானம் செய்துள்ளார்.
ஸ்டாலினை வளைப்பதோடு விட்டாரா திருமா? “காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக ராகுல் பதவி ஏற்பதன் மூலம், புதிய பரிமாணம் உருவாகும் என நான் கருதவில்லை. ஏனென்றால், தற்போதே அவர், கட்சியின் வலிமை வாய்ந்த சக்தியாகத்தான் உள்ளார்.” என்று கூறியுள்ளார்.
ராகுலின் தேருக்கு இப்படி வாலண்டியராக போயி திருமா வடம் பிடித்து இழுப்பது ‘நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி மற்றும் தனக்கான சீட்டுகளுக்காகத்தான். ஸ்டாலினை ஐஸ் வைத்து சட்டசபையில் தன் கட்சியின் அரசியல் வாழ்க்கைக்காக முயல்பவது போல் இது டெல்லி லாபி. ’ என்று சிரிக்கின்றனர் விமர்சகர்கள்.
திருமாவின் இந்த திட்டங்கள் எந்தளவுக்கு கைகொடுக்கின்றன என்று பார்ப்போம்!