தமிழகத்துக்கு நீங்க இதெல்லாம் செஞ்சு தரணும் … நிர்மலா சீத்தாராமனிடம் நீண்ட பட்டியலை அளித்த திருமா !!

By Selvanayagam PFirst Published Jul 3, 2019, 8:00 PM IST
Highlights

டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாரமனை நேரில் சந்தித்த விடுதலைச்சிறுத்தைகள்  கட்சி தலைவரும் எம்.பி.யுமான தொல்.திருமாவளவன், 12 கோரிக்கைள் அடங்கிய மனு ஒன்றை அளித்தார். அந்த கோரிக்கைகளை  நிறைவேற்றுவதாக நிர்மலா சீதாராமன் உறுதி அளித்துள்ளார்.
 

மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனிடம் திருமா அளித்த கோரிக்கையில், 

1 . கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இப்போது வேலையில்லா திண்டாட்டம் மிக அதிகமாக உள்ளது. இதை சரி செய்வதற்கு சிறப்பு திட்டம் தேவை. 

2. விவசாயிகள் துயரத்தில் தவிக்கின்றனர். பல விவசாயிகள் தற்கொலை செய்கின்றனர். இந்த பட்ஜெட்டில் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டு மென கேட்டுக் கொள்கிறேன். 

3. வருமான வரி வரம்பை ரூ.10 லட்சமாக உயர்த்த வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் குடிசை  வீடுகளை நிரந்த வீடுகளாக மாற்றும் பெரும் திட்டத்தை இந்த பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும். 

4. தலித் மாணவர் மற்றும் மாணவிகளுக்கான சிறப்பு பள்ளிகளை நாடு முழுவதும் தொடங்குவதற்கு 2008-ம் ஆண்டு பிரணாப் முகர்ஜி தலைமையிலான அமைச்சர்கள் குழு பரிந்துரைத்தது. ஆனால் முந்தைய அரசுகள் அதை செயல்படுத்தவில்லை. அந்த திட்டத்துக்கான அறிவிப்பை இந்த முதல் பட்ஜெட்டில் எதிர்பார்க்கிறோம். 

5. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அம்பேத்கர் வேண்டுகோளுக்கிணங்க போஸ்ட் மெட்ரிக்ஸ் காலர் ஷிப் தொடங்கப்பட்டது. எவ்வளவு எண்ணிக்கையில் தலித் மாணவ-மாணவியர் பயின்றாலும் அவர்களுக்கு தேவையான உதவித் தொகையை வழங்கும் திறந்த நிலைத்திட்டம் இது. ஆனால் போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததால் ரூ.11 ஆயிரம் கோடி அளவிற்கு நிலுவைத் தொகை உள்ளது. இது தலித் மாணவர்களுக்கு சாதகமற்ற ஒரு சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. உதவித் தொகை மறுக்கப்பட்ட பல தலித் மாணவர்கள் தங்களது படிப்பை இடையில் நிறுத்தியுள்ளனர். இந்த திட்டத்துக்கு போதிய நிதியை ஒதுக்க வேண்டும். 

6. 2018-2019-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் எஸ்.சி. எஸ்.பி. திட்டத்திற்கு 1,11,780.33 கோடி ரூபாயும், டி.எஸ்.பி. திட்டத்திற்கு 48,108.04 கோடி ரூபாயும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தலித் மற்றும் பழங்குடியினரின் மக்கள் தொகைக்கு ஏற்ப நிதியை இந்த பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்ய வேண்டும். 

7. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு போதிய நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். 

8. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை நிறைவேற்று வதற்கு தேவையான நிதியை தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும். 

9. விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலைகளை தொடங்க தேவையான நிதியை ஒதுக்க வேண்டும்.

10. வறட்சி, பேரிடர்களை சந்திப்பதற்கு போதிய நிதியை தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும்.

 11. நம்நாட்டில் உள்ள நில மற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு உதவ அனைவருக்கும்   அடிப்படை வருமானம் வழங்கும் திட்டம் போன்றதொரு திட்டத்தை அறிவிக்க வேண்டும். 

12. தொழிற்துறையில் அதிகமான வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டத்தையும் அதற்கான உதவித் தொகையையும் இந்த பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும் என 12 கோரிக்கைகள் அடங்கிய மனுவை திருமாவளவனும், ரசிகுமாரும் அளித்தனர்.

மனுவைப் பெற்றுக் கொண்ட அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்துள்ளார். 

click me!