
சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக காலை வாரிவிட்டது என்ற ராமதாஸ் பேச்சுக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலடி கொடுத்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இடம் பெற்றிருந்தது. கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால், பாமக 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. மற்ற தொகுதிகளில் தோல்வியை சந்தித்தது. தேர்தல் தோல்விக்கு அதிமுகவினர் ஒழுங்காக தேர்தல் பணி செய்யாததே காரணம் என்று அப்போது பாமக பகிரங்கமாக குற்றம்சாட்டியது. பாமகவை தோற்கடிக்க வேண்டும் என்ற பாணியில் அதிமுகவினர் வேலை பார்த்ததாகவும் குற்றம் சாட்டியது. இதற்கு அதிமுக தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டது. பாமகவை கூட்டணியில் சேர்த்தது தான் அதிமுக தோல்விக்கு காரணம் என்றும் அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர். தொடர்ந்து அதிமுக, பாமகவுடன் மோதல் போக்கு இருந்து வருகிறது.
இந்நிலையில் வர உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் பாமக நிறுவனர் ராமதாஸ், அதிமுக மீது பரபரப்பு குற்றச்சாட்டை அள்ளி வீசியுள்ளார். அதாவது, சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்று பாமக நிறுவனர் ராமதாஸ் பேசுகையில், ஆரம்பத்தில் தனியாக போட்டியிட்டு 4 எம்எல்ஏ சீட் வென்றோம். அப்படியே தொடர்ந்து தனித்து போட்டியிட்டு இருந்தால், ஆட்சியை கைப்பற்றியிருக்கலாம்.
ஆனால், சிலர் கூறியதன் பேரில் கூட்டணி அமைத்து போட்டியிட்டு தோற்றோம். தேர்தலில் கூட்டணி என்றாலே கால் வாருவதாக இருக்கிறது. கூட்டணி தர்மமெல்லாம், அதர்மமாகிவிட்டது. கடந்த தேர்தலில் 23 தொகுதியில் போட்டியிட்ட நிலையில், குறைந்தது 15 தொகுதியிலாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்று அதிமுகவை குற்றம் சாட்டி சரமாரியாக பேசினார். ராமதாசின் இந்த அதிரடி பேச்சு அதிமுகவில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் ராமதாசின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த செல்லூர் ராஜூ;- அதிமுக கூட்டணியிலிருந்து பாமக விலகிவிட்டது. அவர்கள் விலகிய பிறகு பேசும் கருத்துக்களுக்கு எல்லாம் எப்படி பதில் சொல்ல முடியும்? பாமகவினர் பேசுவதற்கு அதிமுக தலைவர்கள் பதில் சொல்வார்கள் என்று செல்லூர் ராஜூ தெரிவித்தார். அதிமுக ஓர் அருமையான அமைப்பு. அதிமுகவை 31 ஆண்டுகள் ஆட்சியில் அமர வைத்து அழகு பார்த்தவர்கள் தமிழக மக்கள். அதிமுக சாதனை மேல் சாதனை செய்து கொண்டு வருகிறது. அதிமுகவினர் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை கொண்டவர்கள்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு மிகப் பிரகாசமாக உள்ளது. திமுக அரசு மீது தமிழக மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டார்கள். பாஜக தான் எதிர்க்கட்சியாக செயல்படுகிறதா என கேட்கிறீர்கள். பாஜக வளரும் கட்சி என்பதால் அவர்களின் செயல்பாடுகள் அப்படித்தான் இருக்கும். யார் போராட்டம் நடத்துகிறார்கள் என்பதெல்லாம் முக்கியம் அல்ல. மக்களை கவரும் வகையில், எண்ணத்தை பிரதிபலிக்கிற போராட்டத்தை, அரசுக்கு வலுவான கருத்தை எடுத்துரைக்கும் போராட்டமாக இருக்க வேண்டும்” என செல்லூர் ராஜூ தெரிவித்தார்.