அடுத்த ஸ்கெட்ச் இவருக்கா..? ஓபிஎஸ் & மகன் ரவீந்திரநாத் மீது வழக்கு பதிவு... நீதிமன்றம் காட்டிய அதிரடி..!

By Raghupati R  |  First Published Jan 8, 2022, 7:47 AM IST

‘தேர்தல் தொடர்பான பிரமாண பத்திரத்தில், போலி தகவல் குறிப்பிட்டதாக பன்னீர்செல்வம், அவரது மகன் ரவீந்திரநாத் எம்.பி  ஆகியோருக்கு எதிரான புகாரில் வழக்குப்பதிந்து பிப்ரவரி 7க்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என தேனி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.


2019 நாடாளுமன்ற தேர்தலில் ப.ரவீந்திரநாத் தேனி தொகுதியிலும், கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் போடிநாயக்கனூர் தொகுதியிலும் போட்டியிட்டனர். வேட்பு மனு தாக்கலின்போது இருவரும் தங்களது அசையும் மற்றும் அசையா சொத்துகள் உள்ளிட்ட குறித்து உண்மையை மறைத்து தவறான தகவல்களை தெரிவித்துள்ளதாக பகிரங்கமாக குற்றம்சாட்டி வந்த திமுக நிர்வாகி மிலானி என்பவர், ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் மீது இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என கோரி, தேனி மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள எம்பி., எம்எல்ஏக்களுக்கான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

Latest Videos

undefined

மிலானி தமது மனுவில், 'ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன் ரவீந்திரநாத் ஆகியோர் தேர்தலின்போது தாக்கல் செய்த வேட்புமனுவில் அவர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள், விவசாய நிலங்கள், ஆண்டு வருமானம்,கடன், கல்வித் தகுதி உள்ளிட்டவை குறித்த விவரங்களை வேண்டுமென்றே தவறாக தெரிவித்துள்ளனர். அதற்கான ஆவணங்கள் என்னிடம் உள்ளன. ஓ.பன்னீர்செல்வம் தமிழகத்தின் முதலமைச்சராகவும், பலமுறை அமைச்சராகவும் இருந்தவர் என்பதால் அரசியல் செல்வாக்கு மிகுந்தவராக உள்ளார். 

நானொரு சாதாரண நபர் என்பதால், அவரை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ள எனக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும்' என்று தமது மனுவில் மிலானி கோரியிருந்தார். மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி, ' ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் மீது CRPC-190,200 ஆகிய பிரிவுகளின் வழக்குத் தொடர போதுமான முகாந்திரங்கள் உள்ளன. 

எனவே இந்த வழக்கு உடனடியாக தேனி மாவட்ட குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டு, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ப.ரவிந்திரநாத் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அத்துடன் இந்த வழக்கின் இறுதி விசாரணை அறிக்கையை 07-02-2022 அன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கை தொடுத்த மிலானி என்பவருக்கு சாட்சிய பாதுகாப்பு சட்டம் 2018-ன் படி காவல்துறையின் சார்பாக உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்' என்றும் நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

மேலும், 'அரசமைப்பு கோட்பாடு விதிகளின்படி தேர்தலை நேர்மையாக நடத்த ஒவ்வொரு குடிமகனும் பாடுபடுகிறான். இதனை நீதிமன்றம சொல்லி யாருக்கும் தெரிய வேண்டியதில்லை' எனவும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். அதிமுகவில் அடுத்ததாக டார்கெட் செய்யப்படும் ஆளாக ‘ஓபிஎஸ் ’ இருப்பாரோ ? என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்து இருக்கிறது.

click me!