
குட்கா விவகாரம் குறித்து விசாரனை செய்து வந்த விஜிலன்ஸ் கமிஷனர் ஜெயக்கொடி மாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக சட்டப்பேரவையில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பேச முற்பட்டார். ஆனால் அதற்கு சபாநாயகர் தனபால் மறுப்பு தெரிவித்து விட்டார்.
தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்ய அனுமதித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்தக் குற்றச்சாட்டில் துணை போனதாக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் மீதும் புகார் உள்ளது. ஆனாலும் அவரின் பணி நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிராகவும், சி.பி.ஐ விசாரணைக் கோரியும் தி.மு.க எம்.எல்.ஏ அன்பழகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் விஜிலன்ஸ் கமிஷனராக ஜெயக்கொடி நியமிக்கப்பட்டார். அவர் மிகவும் திறமையாக செயல்படுவதாக அரசும் பாராட்டு தெரிவித்தது.
இந்நிலையில் நேற்று முன் தினம் விஜிலன்ஸ் கமிஷனராக மோகன் என்பவரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.
அதேசமயம் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்றைய முன் தினம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது.
இதையடுத்து மூன்றாவது நாளான இன்று கேள்வி பதில் விவாதம் நடைபெற்று வருகிறது. அதில், திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குட்கா விவகாரம் குறித்து விசாரனை செய்து வந்த விஜிலன்ஸ் கமிஷனர் ஜெயக்கொடி மாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக சட்டப்பேரவையில் பேச முற்பட்டார்.
ஆனால் அதற்கு சபாநாயகர் தனபால் மறுப்பு தெரிவித்து விட்டார். இதனால் திமுக வெளிநடப்பு செய்தது.