பதவியேற்று 25 நாட்களுக்கு பிறகு... எடியூரப்பா ஆட்சியில் நாளை நடக்கவுள்ள திருப்புமுனை சம்பவம்..!

By Thiraviaraj RMFirst Published Aug 19, 2019, 5:20 PM IST
Highlights

அமைச்சர் பதவி கிடைக்காமல் அதிருப்திக்கு உள்ளாகும் எம்.எல்.ஏ.க்களுக்கு வாரிய தலைவர் பதவி வழங்கி சமாதானப்படுத்த எடியூரப்பா முடிவு செய்துள்ளார்.

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் - ஜனதாதளம் கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததை தொடர்ந்து கூட்டணி ஆட்சி கடந்த மாதம் 23-ம் தேதி கவிழ்ந்தது. இதைத் தொடர்ந்து முதல்வராக எடியூரப்பா கடந்த மாதம் 26-ந் தேதி பதவி ஏற்றார். அவருடன் அமைச்சர்கள் யாரும் பதவி ஏற்கவில்லை. இதனால், அமைச்சரவையில் எடியூரப்பா ஒருவர் மட்டுமே இருக்கிறார்.

இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக குறை கூறி வருகின்றன. வட கர்நாடகத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தின்போது, அமைச்சர்கள் இல்லாததால், நிவாரண பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.

இந்த நிலையில் டெல்லி சென்ற எடியூரப்பா, பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷாவை நேரில் சந்தித்து அமைச்சரவை விரிவாக்கத்திற்கு ஒப்புதல் வாங்கியுள்ளார். கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் 20-ந் தேதி நடைபெறும் என்று எடியூரப்பா ஏற்கனவே அறிவித்தார். இதுகுறித்து கவர்னர் வஜூபாய் வாலாவிடம் எடியூரப்பா அனுமதி கோரினார். அதற்கு கவர்னர் அனுமதி வழங்கியுள்ளார்.

அதன்படி கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் நாளை  காலை 10 மணிக்கு கவர்னர் மாளிகையில் நடக்கிறது. 25 நாட்களுக்கு பிறகு இந்த அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற உள்ளது. இதில் சுயேச்சை எம்.எல்.ஏ. நாகேஷ் உள்பட 14 பேர் அமைச்சர்களாக  பதவி ஏற்கிறார்கள். மற்றொரு சுயேச்சை எம்.எல்.ஏ. சங்கர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதனால் அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை.

அமைச்சர் பதவி கிடைக்காமல் அதிருப்திக்கு உள்ளாகும் எம்.எல்.ஏ.க்களுக்கு வாரிய தலைவர் பதவி வழங்கி சமாதானப்படுத்த எடியூரப்பா முடிவு செய்துள்ளார்.

click me!