ஒரு மாநிலத்திற்குள் பிரதமர் நுழைய முடியவில்லை.. இது நாட்டிற்கே தலை குனிவு.. கொந்தளிக்கும் சரத் குமார்.

Published : Jan 06, 2022, 01:30 PM IST
ஒரு மாநிலத்திற்குள் பிரதமர் நுழைய முடியவில்லை.. இது நாட்டிற்கே தலை குனிவு.. கொந்தளிக்கும் சரத் குமார்.

சுருக்கம்

நாட்டின் பிரதம மந்திரி செல்லும் நிகழ்ச்சியில் இத்தகைய பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டிருப்பது இந்திய தேசத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய தலைகுனிவு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்தவொரு பிரதிநிதியின் பாதுகாப்பையும் உறுதி செய்வது அரசின் கடமை. சுய விருப்பு, வெறுப்புகளால் இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் இனி எப்போதும் நிகழாதவகையில் நடவடிக்கை எடுப்பது அவசியம். 

பாதுகாப்பில் கவனக்குறைவு காரணமாக பிரதமர் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருப்பது தேசத்திற்கு தலைகுனிவு என்றும் பிரதமர், முதலமைச்சர் ஆகிய முக்கிய பிரதிநிதிகளின் பாதுகாப்பில் எந்தவொரு சமரசமும், அரசியல் உள்நோக்கமும் இருக்கக்கூடாது என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். 

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப்  டெல்லி ஹரியானா உள்ளிட்ட மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் நாட்டின் தலைநகர் டெல்லி எல்லையில் ஒரு ஆண்டுக்கு மேலாக போராட்டம் நடத்தி வந்தனர். ஆனால் அதை பிரதமர் மோடி கண்டு கொள்ளவே இல்லை என்ற குற்றச்சாட்டு அவர் மீது இருந்து வருகிறது.  இந்நிலையில் பஞ்சாப், உ.பி உள்ளிட்ட 5 மாநில தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வேளான் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளது. தேர்தலை நோக்கமாகக் கொண்டே இந்த சட்டம் திரும்பப் பெறப்பட்டிருக்கிறது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் பாஜகமீது குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில் நேற்று பஞ்சாப் மாநிலம் பெராஸ்பூரில் நடைபெற இருந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி பங்கேற்க இருந்தார்.  42.750 கோடி மதிப்பிலான திட்டங்களை அவர் தொடங்கி வைக்க இருந்தார். 

அதற்காக நேற்று காலை பஞ்சாப் சென்ற பிரதமர் மோடி, நிகழ்ச்சி நடைபெற இருந்த இடத்திற்கு ஹெலிகாப்டர் வாயிலாக செல்ல இருந்தார். ஆனால் வானிலை மோசமாக இருந்த காரணத்தினால் அவர் சாலை மார்க்கமாக பயணிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் அவர் வருவதை அறிந்து ஏராளமான விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பதிண்ட என்ற இடத்தில் மேம்பாலத்தில் பிரதமர் மோடியின் கான்வாய் வாகனம் பதினைந்து முதல் இருபது நிமிடங்கள் அப்படியே நின்றது. பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாட்டில் ஏற்பட்ட மிகப்பெரிய குளறுபடியாக இது கருதப்படுகிறது. 

உடனடியாக பதிண்டா விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி திரும்பி சென்றார். பாதுகாப்பு குறைபாடு காரணமாக அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதை உள்துறை அமைச்சகம் கடுமையாக கண்டித்துள்ளது. பிரதமரின் பாதுகாப்பு விவகாரத்தில் குளறுபடி ஏற்பட்டுள்ளது என்றும் இதுதொடர்பாக பஞ்சாப் மாநில அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்றும், பிரதமர் வருகிறார் என்பதை அறிந்தும் ஏன் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்றும் மாநில அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்போது இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இந்த செயலை கண்டித்து வருகின்றனர். இந்நிலையில் பாதுகாப்பில் கவனக்குறைவு காரணமாக பிரதமர் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருப்பது தேசத்திற்கு தலைகுனிவு

என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் அதன் விவரம் பின்வருமாறு:- பஞ்சாப் மாநிலம், ஃபிரோஸ்பூரில் நடக்கவிருந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக, பிரதமர் மோடி சாலைமார்க்கமாக அப்பகுதி சென்ற போது, பதிண்டா என்ற இடத்தில் சாலைமறியல் காரணமாக 20 நிமிடம் பாதுகாப்பு அச்சுறுத்தலால் பயணத்தை தொடர முடியாமல், பிரதமரின் நிகழ்ச்சி  ரத்து செய்யப்பட்டிருப்பது வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது.

 

நாட்டின் பிரதம மந்திரி செல்லும் நிகழ்ச்சியில் இத்தகைய பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டிருப்பது இந்திய தேசத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய தலைகுனிவு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்தவொரு பிரதிநிதியின் பாதுகாப்பையும் உறுதி செய்வது அரசின் கடமை. சுய விருப்பு, வெறுப்புகளால் இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் இனி எப்போதும் நிகழாதவகையில் நடவடிக்கை எடுப்பது அவசியம். முக்கியமாக பிரதமர், முதலமைச்சர் ஆகிய முக்கிய பிரதிநிதிகளின் பாதுகாப்பில் எந்தவொரு சமரசமும், அரசியல் உள்நோக்கமும் இருக்கக்கூடாது என்பதை தெள்ளத்தெளிவாக உணர்ந்து அனைத்து அதிகாரிகளும், மத்திய, மாநில அரசுகளும் செயல்பட வேண்டும் என்பதை அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். 

PREV
click me!

Recommended Stories

தமிழக அரசியலில் ட்விஸ்ட்.. புதிய கட்சி தொடங்கினார் சசிகலா.. எம்.ஜி.ஆர், ஜெ., படங்களுடன் கொடி!
21 தான் தர முடியும்.. இஷ்டம்னா இருங்க இல்லைனா.. கெத்து காட்டும் திமுக.. புலம்பும் கதர்சட்டைகள்!