தமிழகத்தில் மாவட்டங்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்வு.. மயிலாடுதுறை தனி மாவட்டமானது.. எடப்பாடியார் அதிரடி.

By Ezhilarasan BabuFirst Published Dec 28, 2020, 11:58 AM IST
Highlights

தமிழகத்தில் 38வது மாவட்டமாக மயிலாடுதுறை உதயமாகி உள்ளது, அதை இன்று தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். 

தமிழகத்தில் 38வது மாவட்டமாக மயிலாடுதுறை உதயமாகி உள்ளது, அதை இன்று தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.  தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றது முதல் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நிர்வாக வசதிக்காக தமிழகத்தின் மாவட்டங்களை பிரிக்கும் வகையில், மாவட்டங்களில் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறார்.பரப்பளவு மற்றும் மக்கள்தொகையில்  அதிகமாக உள்ள மாவட்டங்களை இரண்டாகப் பிரித்து புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. 

அந்த வகையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நெல்லை மாவட்டத்தை பிரித்து கூடுதலாக தென்காசி என்ற புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது. அதேபோல் விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர், மற்றும் ராணிப்பேட்டை என்ற இரண்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது. அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டு தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது, இப்படி கூடுதலாக 5 மாவட்டங்கள் புதிதாக உதயமானது. புதிய மாவட்டங்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த நாகப்பட்டினம் மாவட்டத்தை பிரித்து தற்போது புதிதாக மயிலாடுதுறை என்ற புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம்  அறிவிக்கப்பட்டு ஏப்ரல் மாதம் அரசாணை வெளியிடப்பட்டது. இந்நிலையில் மயிலாடுதுறை தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. இதனால் தமிழகத்தின் மாவட்டங்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் மயிலாடுதுறை மக்களின் நீண்ட நாள் கோரிக்கை  நிறைவேறியுள்ளது. இதனால் அந்நாட்டு மாவட்ட மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

click me!