
தமிழக அரசியலில் 'அடுக்குமொழிப் பேச்சாளர்' என்று அறியப்பட்ட காளியம்மாள், நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி நீண்ட மௌனத்திற்குப் பிறகு அதிமுகவில் இணைந்துள்ளது அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
தமிழக அரசியலில் தனி வழி' என முழங்கிய நாம் தமிழர் கட்சியின் பெண் சிங்கமாக வலம் வந்த காளியம்மாள், இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளார். பல ஆண்டுகளாகச் சீமானின் நிழலில் 'தூய தமிழ் தேசியம்' பேசிய ஒரு குரல், இன்று 'திராவிட நிழலில்' தஞ்சம் புகுந்திருப்பது அரசியல் விமர்சகர்களைக் புருவம் உயர்த்த வைத்துள்ளது.
கொள்கையா? காலத்தின் கட்டாயமா?
நாம் தமிழர் கட்சியில் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராக இருந்தபோது, திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே 'தமிழகத்தைச் சீரழிக்கும் திராவிடக் கட்சிகள்' என மேடைதோறும் முழங்கியவர் காளியம்மாள். ''கடலூரில் நாம் தமிழர், கச்சத்தீவில் நாம் தமிழர்" எனத் தமிழ்த்தேசிய நெருப்பை விதைத்தவர், இன்று அதே திராவிட இயக்கத்தின் ஒரு அங்கமாக மாறியிருப்பது தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு கட்சியிலிருந்து மௌனமாக விலகிய காளியம்மாள், ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு அதிமுகவைத் தேர்ந்தெடுத்திருப்பது, அவரது 'அரசியல் பிழைப்பு' குறித்த கேள்விகளை எழுப்புகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக விரித்துள்ள வலையில், பலமான பெண் பேச்சாளர் ஒருவர் விழுந்துள்ளார் என்பதே எதார்த்தம்.
சீமானுக்குப் பின்னடைவா? அதிமுகவின் வியூகமா?
சீமானின் மேடைப் பேச்சுகளுக்கு இணையாக அடுக்குமொழியில் பேசக்கூடிய காளியம்மாளின் வெளியேற்றம், நாம் தமிழர் கட்சிக்குக் கடலோர மாவட்டங்களில் ஒரு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. அதே சமயம், காளியம்மாளை இழுப்பதன் மூலம் அதிமுக தனது செல்வாக்கை மீண்டும் நிலைநிறுத்த ஒரு சிறந்த பெண் பேச்சாளரைப் பெற்றுள்ளது. மீனவர் சமூகத்தைச் சேர்ந்த காளியம்மாளுக்கு நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிட அதிமுக வாய்ப்பளிக்கும் எனப் பேசப்படுகிறது.
சரியான முடிவு?
"திராவிடம் காலாவதியாகிவிட்டது" என்று பேசியவர், இன்று அதே திராவிடக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் சால்வை போர்த்தி நிற்பது நகைப்புக்குரியது எனச் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுகின்றன. காளியம்மாள் அதிமுகவில் இணைந்ததை அவரது ஆதரவாளர்கள் சரியான முடிவு என ஆதரித்தாலும், நடுநிலையான வாக்காளர்கள் இதை கொள்கை மாற்றமாக அல்லாமல் வெற்று அரசியல் நகர்வாகவே பார்க்கின்றனர்.
அதிமுகவில் இணைந்த கையோடு, திமுக-வை நோக்கி அவர் வீசப்போகும் வார்த்தை அம்புகள் பழைய வீரியத்துடன் இருக்குமா? அல்லது புதிய எஜமானர்களுக்காகத் தன் குரலை மாற்றிக் கொள்வாரா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.