பாமகவை நினைத்து பதராய் போகப்போகும் திமுக... துரைமுருகனின் நயவஞ்சகப்பேச்சால் கூட்டணி கட்சிகள் குமுறல்..!

By Thiraviaraj RMFirst Published Oct 3, 2020, 3:46 PM IST
Highlights

ஏற்கெனவே கூட்டணி கட்சியினர் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என திமுக நச்சரித்து வருகிறது. ஆனால், கூட்டணி கட்சியினர் அதனை விரும்பவில்லை. 

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனின் துடுக்கான பேச்சு சில நேரத்தில் சம்பந்தப்பட்டவர்களின் கழுத்தில் கத்தி வைக்கும். அல்லது கலகமூட்டும்.  கட்சிக்காரர்கள், மூத்த நிர்வாகிகள் மட்டுமின்றி, பிற கட்சியினரையும் சகட்டுமேனிக்கு விமர்சிப்பதில் சளைக்காதவர் இந்த காட்பாடியார். அவர் நேருக்கு நேர் பாராட்டுவதும், வெளிப்படையாகவே கோல் மூட்டுவதும் சம்பந்தப்பட்டவர்களை சங்கடத்தில் ஆழ்த்தி விடும். நாரதர் கலகம் என்பார்களே... அப்படி அவரது பேச்சு குழப்பத்தை ஏற்படுத்தி கூட்டணி கட்சியினருக்கு குந்தகம் விளைவித்து, தனது கட்சியில் நற்பெயரை பெற்று விடுவார். 
 
அப்படி அவர் நேற்று பேசிய பேச்சால், திமுக கூட்டணி கட்சியினர் திகிலடைந்து கிடக்கின்றனர். வேலூரில் நேற்று திமுக சார்பில் நடைபெற்ற கிராமசபா கூட்டத்தில் கலந்துகொண்ட துரைமுருகன், ‘’கூட்டணியில் கடைசி நேரத்தில் மாற்றம் ஏற்படலாம். அப்போதுதான் எவன் எவன் எங்கிருக்கிறான் என தெரிய வரும். திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகள் பேரவைத் தேர்தலில் சீட்டுகள் போதவில்லை என வெளியே செல்வதும், வெளியில் இருந்து கூட்டணிக்குள் சேருவர். இது சகஜம் தான். இவையெல்லாம் முடிந்தால்தான் யார் யார் கூட்டணியில் இருப்பார்கள் என தெரியவரும். திமுக கூட்டணியில் மாற்றம் வர வாய்ப்புள்ளது ’’என ஏக வசனத்தில் பொளந்துகட்டினார். கூட்டணி கட்சியினரை இப்படி மட்டம் தட்டி பேசுவது துரைமுருகனுக்கு புதிதல்ல. 

கடந்த தேர்தலின்போது வைகோ உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்களை சகட்டுமேனிக்கு விமர்சித்துவிட்டு பின்னர் சமாளித்து சாந்தமாக்கினார். அதே போல் இப்போதும் மதிமுகவை காயப்படுத்தி இருக்கிறார் துரைமுருகன். அந்த கட்சியின் முக்கிய பிரமுகரான தாயகம் கவி என்பவர்’’பதவி வரும் போது பணிவு வரவேண்டும் என்கிற வரிகளை நீங்கள் கவனித்ததே இல்லையா? ஆனால், இத்தனை பதவிகள் வந்த பிறகும் உங்களுக்கு அந்த பணிவும் நாகரீகமும் வரவில்லையே? இனி என்ன மிச்சமருக்கிறது? திமுக தலைவர் பதவி மட்டும்தான். அது கிடைத்தால் மட்டும் உங்களுக்கு நாகரீகம் வந்துவிடவா போகிறது? வட்டாச்சியராவது? கொட்டாச்சியராவது? என்று நீங்க அடித்த சூர மொக்கைத்தனங்களை  தொடர்ந்து நடத்துங்கள்! நாகரீகமாவது மண்ணாவாது!’’என சமூக வலைத்தளத்தில் வெளிப்படையாகவே அனலை கக்கியிருக்கிறார். அந்தக் கட்சியைச் சேர்ந்த பலரும் இவ்வாறு ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

காங்கிரஸ் கட்சியிலும் கொந்தளிப்பிற்குக் குறைவில்லை. இது தொடர்பாக நம்மிடம் பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர், ’’கூட்டணி கட்சிகளை காலம் காலமாக திமுக கிள்ளுக்கீரையாகவே நடத்தி வருகிறது. ஏதோ பிச்சை போடுவது போலவே இடங்களைத் தருவதாக அந்தக் கட்சியினர் நினைக்கிறார்கள். கடும் போட்டி நிறைந்த இன்றைய சூழலில் சின்ன கட்சியைக் கூட அரவணைத்துச் செல்ல வேண்டும் என்கிற அடிப்படை அறிவுகூட அவர்களுக்கு இல்லை. இத்தகைய தலைக்கனத்தை மாற்றிக்கொள்ளாவிட்டால் ஆயுள் முழுக்க திமுக எதிர்க் கட்சியாகத்தான் இருக்க வேண்டியிருக்கும்’’என ஆவேசப்பட்டார்.
 
இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பிற கூட்டணி கட்சிகள் மத்தியிலும் இதே மாதிரியான கொதிப்பை பார்க்க முடிகிறது. ‘’இனியும் பொறுப்பதற்கில்லை. இதனை உடனடியாக திமுக தலைவர் ஸ்டாலின் கவனத்திற்குக் கொண்டு செல்வோம். அவரது செயல்பாட்டை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கையை மேற்கொள்வோம்’’என திமுக கூட்டணி கட்சிகள் தீர்மானித்திருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது.

ஆரம்பட்திலேயே இப்படி துரைமுருகனை விட்டால் கூட்டணிக் கட்சிகள் சீட்டு கேட்பதில் கொஞ்சம் அடக்கி வாசிப்பார்கள் என நினைத்து மு.க.ஸ்டாலினின் தூண்டுதலால் தான் அவர் அப்படி பேசுவதாகவும் கூறுகிறார்கள். அதேபோல் பாமகவை கூட்டணிக்கு கொண்டு வந்து விசிகவை வெளியேற்ற வேண்டும் என ஏற்கெனவே திமுக தலைமை முடிவு செய்து விட்டதாகவும் கூறுகிறார்கள். ஏற்கெனவே, பாமக கூட்டணியில் இருக்கும் இடத்தில் விசிக இருக்காது என தெளிவாக கூறியிருந்தார் தொல் திருமாவளவன். 

திமுக எப்போதும் கூட்டணி பலத்தை நம்பியே தேர்தலில் களமிறங்கும். ஆனால், அதிமுக தொண்டர்களையும், மக்களையும் நம்பி களமிறங்குவர். அதற்கு நடந்து முடிந்த சில தேர்தல்களே உதாரணம். அப்படி இருக்கையில், இப்போதே திமுக கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த ஆரம்பித்து விட்டார் துரைமுருகன். ஏற்கெனவே கூட்டணி கட்சியினர் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என திமுக நச்சரித்து வருகிறது. ஆனால், கூட்டணி கட்சியினர் அதனை விரும்பவில்லை. இப்படிப்பட்ட சூழலில் துரைமுருகனின் பேச்சு திமுகவில் உள்ள கூட்டணி கட்சிகளை கொந்தளிக்க வைத்துள்ளது. அவரது இந்த நாரதர்கலக பேச்சு நிச்சயம் நல்லதாய் முடியாது. நச்சு விதையை கூட்டணி கட்சிகளிடையே தூவி இருக்கிறது என்பதே உண்மை.
 

click me!