அதிமுக ஆட்சி அமையும் நாள் தூரத்தில் இல்லை.. நாள் குறித்த மாஜி அமைச்சர்..!

By Asianet TamilFirst Published Feb 24, 2022, 11:06 PM IST
Highlights

கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது திமுக பொய்யான வாக்குறுதிகளை அளித்தது. மக்களை ஏமாற்றிதான் வெற்றிப்பெற்று திமுக ஆட்சியில் அமர்ந்துள்ளது. நகைக்கடன் ரத்து, கல்விக்கடன் ரத்து போன்ற வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாததால் ஏழை, எளிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் மக்களின் ஏகோபித்த ஆதரவோடு அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.

மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சி ஆள், அதிகார, பணபலம் ஆகியவற்றை எதிர்த்து களத்தில் அதிமுக வேட்பாளர்கள் இறங்கினர். பல்வேறு இடங்களில் அதிமுக வெற்றி தட்டிப் பறிக்கப்பட்டிருக்கிறது. 21 மாநகராட்சி, 138 நகராட்சி, 430 பேரூராட்சிகளில் திமுகவுக்கு சிம்மசொப்பனமாக அதிமுக வேட்பாளர்கள் இருந்து பல இடங்களில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். திமுக பெற்ற வெற்றி நிரந்தரம் அல்ல. அதிமுகவின் தோல்வி நிரந்தரமும் அல்ல. ஆனால், அதிமுகவுக்கு எதிர்காலம் இல்லை என்று சிலர் பேசி வருகிறார்கள். 

திமுகவுக்கு நிச்சயம் மூக்கணாங்கயிறு தேவை. அது தேவைப்படும்போது அதிமுகவுக்கு மக்கள் வாக்களிப்பார்கள். அதேவேளையில் தொடர்ந்து அதிமுக மக்கள் பணியாற்றும். தோல்வியைக் கண்டு நாங்கள் யாரும் துவண்டுவிட மாட்டோம். தொடர்ந்து தொண்டர்கள் கட்சிப் பணியும் களப்பணியும் ஆற்றுவார்கள். திமுகவின் அடக்குமுறையை எல்லாம் சமாளித்து, அதிமுகவை கட்சி ஒருங்கிணைப்பாளர்கள் வழிநடத்தி வருகிறார்கள்” என்று ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார். 

இதேபோல வாணியம்பாடியில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அதிமுக ஆட்சியில் மக்கள் நலன் கருதி கொண்டுவரப்பட்ட திட்டங்களை திமுக அரசு முடக்கி விட்டது. மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம், அம்மா மினி கிளினிக், காவிரி கூட்டு குடிநீர்த் திட்டங்கள் தற்போது முடக்கப்பட்டுள்ளன. கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது திமுக பொய்யான வாக்குறுதிகளை அளித்தது. மக்களை ஏமாற்றிதான் வெற்றிப்பெற்று திமுக ஆட்சியில் அமர்ந்துள்ளது. நகைக்கடன் ரத்து, கல்விக்கடன் ரத்து போன்ற வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாததால் ஏழை, எளிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் பேசும்போது, ‘எனக்கு பின்னாலும் அதிமுக 100 ஆண்டுகள் தமிழகத்தில் மக்கள் சேவை ஆற்றும்’ என்று கூறினார். லட்சணக்கான தொண்டர்களை கொண்ட இயக்கம் அதிமுக. அதை யாராலும் வெல்ல முடியாது. தர்மத்தை சூது கவ்வும். இறுதியில் தர்மமே வெல்லும். அதை போல தமிழகத்தில் மக்களின் ஏகோபித்த ஆதரவோடு அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும். அதற்கான காலம் தொலைவில் இல்லை. ஊரக உள்ளாட்சி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது” என்று கே.சி.வீரமணி தெரிவித்தார். 

click me!