மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த வைச்சுராதீங்க... ரொம்ப அசால்ட்டா இருக்காதீங்க... முதல்வர் கடும் எச்சரிக்கை..!

By Asianet TamilFirst Published Aug 1, 2021, 10:00 PM IST
Highlights

மீண்டும் ஊரடங்கைப் பிறப்பிக்கும் சூழலுக்கு அரசாங்கத்தை நிர்பந்தித்திட வேண்டாம் என்று கடுமையாகவே சொல்கிறேன் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். 
 

அண்டை மாநிலமான கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்புகள் அதிகரித்துள்ளன. தமிழகத்திலும் சற்று பாதிப்புகள் அதிகரித்துள்ளன. இதனையடுத்து சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள கடைகளை அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல முக்கியமான கோயில்களின் நடைகளை 3 முதல் 5 நாட்கள் வரை சாற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலியில் பேசியுள்ளார்.
அதில், “கொரோனா பெருந்தொற்று கடந்த 18 மாதங்களாக  நம் நாட்டையும், நாட்டு மக்களையும் வதைத்துக்கொண்டிருக்கிறது. அரசின் தொடர் நடவடிக்கைகள், மருத்துவர்கள், செவிலியர்களின் சேவை ஆகியவற்றால் கொரோனா இரண்டாம் அலை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், தற்போது மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துவருகிறது. முழு ஊரடங்கிற்குப் பிறகு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால், அதன்பிறகு மக்கள் முன்னெச்சரிக்கை இன்றி இருப்பது வேதனையளிக்கிறது. அதனால், அதிகமாக கூட்டம் கூடும் இடங்களில் கட்டுப்பாடுகளை விதிக்க மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட கூடாது என்பதற்காகவே கடைகளை திறக்க உத்தரவிட்டுள்ளோம். ஆனால்  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காமல் இருந்தால் கொரோனா பரவலுக்கு மக்களே காரணமாகிவிடக்கூடாது என்று வலியுறுத்துகிறேன். மீண்டும் ஊரடங்கைப் பிறப்பிக்கும் சூழலுக்கு அரசாங்கத்தை நிர்பந்தித்திட வேண்டாம் என்று கடுமையாகவே சொல்கிறேன். மூன்றாவது அலையை எதிர்கொள்ளும் வல்லமையும் உட்கட்டமைப்பும் தமிழக அரசுக்கு உண்டுதான். அதற்காக கொரோனாவை விலை கொடுத்து வாங்க வேண்டாம். எல்லோரும் எச்சரிக்கையுடன் இருங்கள். மிக அவசியமான தேவைகளுக்கு மட்டும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும். சமூக இடைவெளி, முகக்கவசம், கிருமி நாசினியைப் பயன்படுத்தி கொரோனாவிலிருந்து நம்மையும், நாட்டையும் காப்போம்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

click me!