
எடப்பாடி அணி பொதுக்குழு கூட்டுவதற்கு தடை விதிக்க கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அதன் மேல்முறையிட்டு மனு இன்று மாலை 4 மணிக்கு விசாரணக்கு வர உள்ளது.
எடப்பாடி அணியும் ஒபிஎஸ் அணியும் இணைந்த பின்னர் நாளை அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என எடப்பாடி அறிவித்தார்.
இதற்கு எதிராக டிடிவி தினகரன் தரப்பு எம்.எல்.ஏக்கள் மறுப்பு தெரிவித்தனர். மேலும், பொதுக்குழு கூட்டுவதற்கு பொதுச்செயலாளர் மற்றும் துணைப் பொதுச்செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்பதால் நாளை நடைபெற உள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என டி.டி.வி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நாளை நடைபெற உள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க நீதிபதி மறுப்பு தெரிவித்து, நீதிமன்ற நேரத்தை வீணடித்த காரணத்தால் எம்.எல்.ஏ வெற்றிவேலுக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
நீதிபதியின் இந்த தீர்ப்பை எதிர்த்து டிடிவி தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல் முறையீட்டு மனு இன்று மாலை 4 மணிக்கு விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கை இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க உள்ளது.