
ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளது என்றும், ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும், ஜெயலலிதா மரணத்தில் ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., இருவரும் நாடகம் ஆடியுள்ளதாகவும் ஸ்டாலின் கூறினார்.
திமுகவின் முப்பெரும் விழா உதகையில் உள்ள ஏடிசி சுதந்திர திடலில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் திமுக செயல் தலைவரும், எதிர்க் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார்.
விழாவில் பேசிய ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் குற்றம் சாட்டினார். எம்.ஜி.ஆர். சிகிச்சை பெற்று வந்தபோது அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து முறையாக மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தை வெளியிட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியிருந்தார். ஆனால், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கருணாநிதியின் கருத்து கொச்சைப்படுத்தப்பட்டது. ஜெயலலிதாவின் மரணத்தில் உண்மை தெரிந்தாக வேண்டும் என்றார்.
ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து, லண்டன் டாக்டர், செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தப்பட்டது. இந்த சந்திப்பு நடத்தப்பட்டபோது முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் இருந்தார்.
இதன் பின்னர், சசிகலாவை முதலமைச்சர் ஆக்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. அப்போது, ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா சமாதி சென்று மௌன விரதம் இருந்தார்.
பிறகு ஓ.பி.எஸ்., ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளதாகவும் இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறினார். முதலமைச்சராக இருந்தபோது, ஜெ. மரணம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தவர், முதலமைச்சர் பதவியில் இருந்து இறக்கப்பட்டபின், ஜெ. மரணம் குறித்து விசாரணை வேண்டும் என்று கேட்கிறார்.
தற்போது ஓ.பி.எஸ்., துணை முதலமைச்சராகவும் பதவியேற்றுள்ளார். முதலமைச்சராக இருக்கும் வரை ஜெயலலிதா மரணம் குறித்து ஓ.பன்னீர்செல்வம் கவலைப்படவில்லை.
ஜெயலலிதா நாட்டின் சாதாரண பிரதிநிதி இல்லை; தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்து மறைந்திருக்கிறார். இந்த மரணத்தில் மர்மம் உள்ளது. எனவே சிபிஐ விசாரணை வேண்டும்.
முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த இசட் பிரிவில் ஆம்புலன்ஸ் வண்டியும் சேர்ந்தது. ஆனால், ஜெயலலிதாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, தனியார் மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் வாகனம் வந்திருக்கிறது. இசட் பிரிவு பாதுகாப்பில் அளிக்கப்பட்டுள்ள ஆம்புலன்ஸ் ஏன் அங்கு இல்லை என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.