
அரசு பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஊதிய உயர்வு, நிலுவை தொகை, ஓய்வூதியம் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் சில நாட்களுக்கு முன்பு வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் அவர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்க போக்குவரத்து துறையில் நிதி இல்லாததால் முழுமையாக உடனே வழங்க முடியவில்லை என அமைச்சர் எம்.ஆர். விஜய பாஸ்கர் காரணம் கூறி வந்தார்.
இதனால் ஊழியர் போராட்டம் நீட்டித்து கொண்டே சென்றது. அப்போது பேசிய அமைச்சர் போக்குவரத்து துறையில் வேலை பார்ப்பவர்கள் சேவை மனப்பான்மையுடன் வேலை பார்க்க வேண்டும் என கூறி வந்தார்.
மக்களின் நிலையை கருத்தில் கொண்டு போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றனர் போக்குவரத்து ஊழியர்கள்.
இந்நிலையில் தற்போது திடீரென தமிழக அரசு பேருந்து கட்டணங்களை அதிரடியாக உயர்த்தியுள்ளது. இதனால் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கக்கூடிய நிலை உருவாகியுள்ளது.
சென்னை தியாகராய நகரில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேருந்து கட்டண உயர்வு என்பது தவிர்க்க முடியாதது எனவும் பேருந்துகள் மக்களுடையது என்பதால் இதை மக்கள் தான் சரிசெய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில், அரசு பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையை சேர்ந்த முனி கிருஷ்ணன் என்பவர் ரிட் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில் பேருந்து கட்டண உயர்வால் ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.