வாசலில் தடுத்து திருப்பி அனுப்பப்பட்ட அதிமுக அமைச்சர்... மோடி கூட்டத்தில் பெருத்த ஏமாற்றம்..!

By Thiraviaraj RMFirst Published Jun 20, 2019, 5:58 PM IST
Highlights

அதிமுக சார்பில் கூட்டத்துக்கு வந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டும் அதிகாரிகள் அதனை ஏற்கவில்லை. 


இந்தியா முழுவதும் மக்களவை, சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது ஒரே இந்தியா ஒரே தேர்தல் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் நேற்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற்ற கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 20 கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், தெலுங்கு தேசம், ஆம்ஆத்மி, தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி உள்பட 6 கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தை நிராகரித்தனர். பாஜக கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் அதிமுகவும் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

அதிமுக சார்பில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், ராஜ்யசபா அதிமுக தலைவர் நவநீதகிருஷ்ணன் ஆகிய இருவரும் அந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்று டெல்லி சென்றார். நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த கூட்டத்தில் பங்கேற்க சி.வி.சண்முகம் சென்றுள்ளார். ஆனால் அவரை அதிகாரிகள் உள்ளே அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினர்.

ஒரு கட்சியின் தலைவர் அல்லது ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருப்பவர் மட்டுமே இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள முடியும் என அதிகாரிகள் அவரிடம் கூறி விட்டனர். அதிமுக சார்பில் கூட்டத்துக்கு வந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டும் அதிகாரிகள் அதனை ஏற்கவில்லை. பிரதமர் தலைமையில் நடக்கும் இந்த கூட்டம் மிக, மிக முக்கியமானது என்பதால் கட்சி தலைவருக்கு பதில் வேறு எந்த பிரதிநிதியையும் அனுமதிக்க இயலாது என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர்.

இதனால் அதிருப்தியடைந்த அமைச்சர் சி.வி.சண்முகம் ஏமாற்றத்துடன் நாடாளுமன்றத்தை விட்டு புறப்பட்டு சென்றார். அதன் பிறகு அவர் விமானம் மூலம் உடனே சென்னை திரும்பினார். பிரதமர் கூட்டிய இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தவிர அவைத்தலைவர் என்ற முறையில் மதுசூதனன் பங்கேற்க மத்திய நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரகலாத் ஜோதி கடிதம் அனுப்பி இருந்தார். ஆனால் உடல் நலக்குறைவு காரணமாக மதுசூதனன் டெல்லி செல்ல இயலவில்லை.

click me!