
கடந்த ஆண்டு நாட்டில் கொண்டுவரப்பட்ட ரூபாய் நோட்டு தடை குறித்து பிரதமர் மோடிக்கு ஐடியாக கொடுத்தவர் என்று கூறப்படும் அணில் போகில், அடுத்து புதிதாக ஒரு ஐடியாவை முன்வைத்துள்ளார்.
ரூபாய் நோட்டு தடை
மஹாராஷ்டிராவில் ‘அர்த்தகிராந்தி’ எனும் அமைப்பை நடத்தி வருபவர் அணில் போகில். பொருளாதாரம் படித்த, நிதி ஆலோசகரான அணில் போகில், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துக்கு முன், பிரதமர் மோடியைச் சந்திக்க அனுமதி கோரி இருந்தார். கருப்பு பணத்தை ஒழிப்பது குறித்து பேச அனுமதி கேட்டதால், பிரதமர் மோடி இவருக்கு 9 நிமிடங்கள் அனுமதி அளித்தார்.
ஆனால், அணில் போகில் பேசிய பேச்சை் கேட்ட பிரதமர் மோடி, 9மணி நேர அப்பாயின்ட்மெண்ட்ைட 2 மணிநேரமாக அனுமதித்து பேசத் தொடங்கினார். கருப்பு பணத்தை ஒழிக்க ரூ. 500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என அறிவியுங்கள் என அணில் போகில் கொடுத்த ஐடியாவைத்தான் மோடி செயல்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், ரூபாய் நோட்டு தடை அமல்படுத்தி இன்றுடன் ஒரு ஆண்டு நிறைவடைகிறது. அது குறித்து அணில் போகில், ஒரு இணைதளத்துக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது-
வளர்ச்சிக்கு நகரும்
முதலில் இதை பணமதிப்பு என்று கூறுவதை நிறுத்துங்கள். இதற்கு பெயர் ரூபாய் நோட்டு தடை ஆகும். இந்த திட்டம் வெற்றி பெற்றதா அல்லது தோல்வி அடைந்ததா என்பது விஷயமல்ல. அரசு இந்த திட்டத்தை செயல்படுத்திவிட்டது. இந்தியா அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி நகரும்.
ஜி..பி.எஸ். திட்டம்
எங்களின் திட்டம் என்பது ஜி.பி.எஸ். முறை போன்றது. ஜி.பி.எஸ். முறை வாகனத்தின் சக்கரத்தை திருப்பாது, ஆனால், ஓட்டுநர் தவறான வழியில் சென்றால், அது சரியான வழிகளை மட்டும் காட்டும். அதைத்தான் நாங்களும் பொருளாதரத்தில் அரசுக்கு வழிகளைக் கூறினோம். முதலில் வழிகாட்டுதல் அவசியம்.
6 மணிநேரம்
இப்போது அரசு நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டிய நிலையில் இருக்கிறது. தற்போது கடைபிடிக்கப்படும் 8 மணிநேர பணி நேரத்தை 6 மணிநேரமாக குறைக்க வேண்டும். இதை இரு ஷிப்ட்களாக மாற்றி பணி கொடுக்க வேண்டும். இதன் மூலம் இளைஞர்களுக்கு அதிகமான வேலைவாய்ப்புகளை வழங்கமுடியும். நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் அதிகரிக்கும்.
வேலைவாய்ப்பு
வேலைவாய்ப்பை உருவாக்குவது அரசுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. அதை எதிர்கொள்ளவும், புதிய வேலைவாய்புகளை உருவாக்கவும் பணி நேரத்தை 6 மணிநேரமாக குறைத்து, இரு ஷிப்ட்களாக அமைக்க வேண்டும். உற்பத்தியை அதிகரிக்க இந்த முறை அவசியம். இந்தியா போன்ற வெப்ப நாடுகளில் மக்கள் 8 மணிநேரம் வேலைநேரமாக இருந்தாலும், 4.5 மணிநேரம் மட்டுமே பணியாற்றுகிறார்கள்.
வாழ்க்கைத்தரம் உயரும்
ஆதலால் உற்பத்தியை அதிகரிக்க பணி நேரத்தை 8 மணிநேரத்தில் இருந்து 6 மணிநேரமாகக் குறைக்கலாம். இரு ஷிப்ட்களில் ஊழியர்கள் பணியாற்றுவார்கள், அவர்களின் வாழ்க்கைத் தரம் அதிகரிக்கும், தொழிற்சாலைகள், நிறுவனங்களில் உற்பத்தி அதிகரிக்கும், பொருளாதார வளர்ச்சி அடுத்து வரும் ஆண்டுகளில் 2 மடங்கு உயரும். இதன் மூலம் குடும்பத்தில் முதல்முறையாக வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.