பிசுபிசுத்துப்போன ஆசிரியர்கள் போராட்டம்... செங்கோட்டையனை வைத்து கெத்து காட்டிய எடப்பாடி..!

By Thiraviaraj RMFirst Published Jan 30, 2019, 11:47 AM IST
Highlights

போராட்டத்தில் உயர்நிலை, மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள் 99 சதவிகிதம் பேர் இன்று பணிக்கு திரும்பியுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதன் மூலம் ஆசிரியர்கள் போராட்டம் தற்காலிகமாக பிசுபிசுத்துப் போயுள்ளது. 

போராட்டத்தில் உயர்நிலை, மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள் 99 சதவிகிதம் பேர் இன்று பணிக்கு திரும்பியுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதன் மூலம் ஆசிரியர்கள் போராட்டம் தற்காலிகமாக பிசுபிசுத்துப் போயுள்ளது. 

இதுகுறித்து பள்ளிக்கல்விதுறை இயக்குநர் தெரிவித்துள்ள தகவலில், ’போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று பணிக்கு திரும்பியுள்ளனர். நேற்று 97 சதவிகிதம் பேர் வேலைக்கு திரும்பிய நிலையில் இன்று 99 சதவிகிதம் ஆசிரியர்கள் பணிக்கு வந்துள்ளனர்’ என அவர் தெரிவித்துள்ளார். 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், ஜன.22 முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தால் தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் பணிகள் முடங்கிவிட்டன. 

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப இன்று காலை 9 மணி வரை அவகாசம் வழங்கி பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது. காலை 9 மணிக்குள் ஆசிரியர்கள் பள்ளிக்கு திரும்பாவிட்டால் அப்பணியிடங்கள் காலிப்பணியிடமாக அறிவிக்கப்படும் எனவும் அறிவுறுத்த்தப்பட்டது.  

தற்போது வரை பள்ளிக்கு திரும்பாத தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரக்கூடிய ஆசிரியர்களை தங்களுடைய பள்ளிக்கு மீண்டும் திரும்ப தகவல் தெரிவித்ததாகவும், எனவே அவர்கள் வரக்கூடிய நிலையில் இருந்தால் தொலைபேசி மூலமாகவும், குறுந்தகவல் மூலமாகவும் உறுதிப்படுத்தலாம். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. அதே நேரத்தில் பள்ளிக்கு வராத நாட்களுக்கு சம்பளம் மட்டுமே பிடித்தம் செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விருப்பம் இருக்க கூடிய ஆசிரியர்கள் நாளை காலை 9 மணிக்குள் தங்களுடைய பள்ளிக்கு வந்து சேர்ந்துவிட வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது. இந்நிலையில் பள்ளி கல்வித்துறை ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் 400 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், மேலும் 602 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

நேற்று 97 சதவிகிதம் பேர் வேலைக்கு திரும்பிய நிலையில் இன்று உயர்நிலை, மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள் 99 சதவிகிதம் பேர் பணிக்கு திரும்பி உள்ளனர். இதனால், போராட்டம் தற்காலிக முடிவுக்கு வந்ததாகவே கருதப்படுகிறது. ஆசிரியர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி வந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசின் கடுமையான எச்சாரிக்கைகளால் நீர்த்து போகச் செய்துள்ளனர். 

அமைச்சர் செங்கோட்டையன் பள்ளிக்கல்வித்துறையில் பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். அதற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துப் வருகிறது. இந்நிலையில் ஆசிரியர்கள் போராட்டத்திற்கு மக்களிடையே ஆதரவு இல்லை. ஆகையால் இந்தப்போராட்டத்தை பிசுபிசுக்க வைத்ததால் செங்கோட்டையன் மீது மக்களுக்கு மேலும் மரியாதை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசுக்கு ஆதரவு பெருகி வருகிறது. இந்த போராட்டத்துஇன் மூலம் செங்கோட்டையனை வைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது பலத்தை நிரூபித்துள்ளார் எனக் கூறுகிறார்கள அமைச்சர் பெருந்தகைகள். 

click me!