25 தொகுதிகளுக்கு டார்கெட்... கட்சிப்பணி செய்யவில்லையா டிஸ்மிஸ்.. அண்ணாமலை கட் அன் ரைட்.. அலறும் காவிப்படை.

By manimegalai aFirst Published Mar 1, 2022, 2:14 PM IST
Highlights

கட்சி பணிகளில் கவனம்  செலுத்தாமல் உள்ள நிர்வாகிகளை உடனே நீக்கி  விட்டு புதியவர்களை நியமிக்க வேண்டும் என பாஜக மாவட்ட தலைவர்களுக்கு அண்ணாமலை உத்தரவு

தேர்தல் வந்தாலே பரபரப்புக்கு கொஞ்சம் கூட குறைவிருக்காது... அந்த வகையில் தேர்தலுக்கு பின்பு யார் பெரியவர்கள் என்ற போட்டி தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக கணிசமான வாக்குகளை பெற்று மாநகராட்சிகளிலும், நகராட்சிகளிலும் , பேரூராட்சியிலும் கால் பதித்துள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியும்  திமுகவுடன் கூட்டணி அமைத்து குறிப்பிட்டு சொல்லும்படியான  இடங்களை கைப்பற்றியது. ஆனால் வாக்கு சதவிகிதத்தில் காங்கிரசை முந்தியுள்ளது பாஜக. இதனால் தமிழகத்தில்  3 வது பெரிய கட்சி நாங்கள் தான் என பாஜக கூறிவருகிறது. இந்தநிலையில் தேர்தல் முடிவுக்கு பிறகு சென்னை பாஜக அலுவலகமாக கமலாலயத்தில் பாஜக மாநில நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். 

அப்போது 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில்  பாஜக குறைந்தபட்சம் 25 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதற்கு தேவையான களப்பணிகளை உடனடியாக செயல்படுத்துமாறு மாவட்ட தலைவர்களிடம் கூறினார்.  நகர்ப்புற உள்ளாட்சி  தேர்தலில்  வெற்றிபெற சிறப்பாக பணியாற்றியதை போல்  நாடாளுமன்ற தேர்தலுக்கும் பணியாற்ற இப்போதே தயாராக வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதே நேரம் கட்சி பணிகளில் சரியாக செயல்படாமல் இருக்கும் நிர்வாகிகளை மாவட்ட தலைவர்கள் உடனடியாக நீக்கிவிட்டு புதியவர்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.. மேலும் தமிழகத்தில் பாஜக கால் ஊண்ட முடியாது என கூறிய ராகுல் காந்திக்கு பதில் அளித்த அண்ணாமலை தற்போது தமிழகத்தில் பாஜக மூன்றாவது இடத்தை பிடித்துள்ளதை  நினைவுபடுத்துவதாக  தெரிவித்துள்ளார். இந்தநிலையில் 2024 நாடாளுமன்ற தேர்தலை இலக்காக வைத்து பாஜகவில் விரைவில் மிகப்பெரிய அளவிலான மாற்றங்களை ஏற்படுத்தி மாநில தலைமை அறிவிக்கும் என்றே பாஜக தலைமை வட்டாரங்கள் தெரிவிக்கின்றது..


சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜக   4 இடங்களில் வெற்றி பெற்றது. இந்தநிலையில  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்ட பாஜக பெற்றுள்ள கனிசமான வெற்றி பாஜக தொண்டர்களிடம்  நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் பாஜகவும் அதிமுகவும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி தொடர்ந்திருந்தால் கூடுதல் வெற்றி பெற்றிருக்கலாம்  என இரு தரப்பிலும் கவலையோடு பேசி வருகின்றனர். எனவே  2024 ஆம்  ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில்  அதிமுக கூட்டணியில் பாஜக இணைந்து போட்டியிடுமா? என்பது கேள்வி எழுந்துள்ளது. அதிமுகவுடன் அமமுக இணைய வேண்டும் என ஆரம்பத்தில் இருந்து பாஜக கூறி வருகிறது. இரண்டு கட்சிகளும் ஒன்றினைந்தால் தான் ஓட்டுகள் சிதறடிக்கப்படுவது தவிர்க்கப்படும் என அமித்ஷா இரண்டு தரப்பிலும் தெரிவித்திருந்தார்.  எனவே நாடாளுமன்ற தேர்தலில் பாஜக  வெற்றிபெற என்ன வியூகம் வைத்துள்ளது என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதே நேரத்தில் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக  கூட்டணி அமைத்து போட்டியிட்டால்  குறைந்தபட்சம் 20 தொகுதிகளை கேட்கும்  என எதிர்பார்க்கப்படுகிறது. மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க தமிழகத்தில் இருந்து தங்கள் பங்குக்கு எம்பிகளை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழக பாஜக உள்ளது. எனவே பாஜகவின் தேர்தல் கணக்கு எப்படி உள்ளது என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.  

click me!