தமிழனை இலங்கையில் அடித்தார்கள், இப்போது அரியானாவிலும் நடக்கிறது: தெருவுக்கு வந்த ஆயிரக்கணக்கான குடும்பம்..!!

Published : Oct 20, 2020, 01:42 PM ISTUpdated : Oct 20, 2020, 01:43 PM IST
தமிழனை இலங்கையில் அடித்தார்கள், இப்போது அரியானாவிலும் நடக்கிறது: தெருவுக்கு வந்த ஆயிரக்கணக்கான  குடும்பம்..!!

சுருக்கம்

ஒரே நாடு , ஒரே குடும்ப அட்டை திட்டத்தின் மூலம் தமிழகத்தில் குடியேறியுள்ள பல இலட்சக்கணக்கான வடமாநிலத்தவர்கள் பயன்பெறும் சூழ்நிலையில், 40 ஆண்டுகளாக வாழ்ந்தும் அரியானா வாழ் தமிழர்களுக்குக் குடும்ப அட்டைகூட வழங்கப்படாமல் இரண்டாம்தரக் குடிமக்களாகவே அவர்கள் நடத்தப்படுவது மிகப்பெரும் கொடுமையாகும். 

அரியானா மாநிலத்தில் வாழும் தமிழர்களுக்கு வாழ்விடத்தையும், வாழ்வாதார உரிமைகளையும் உறுதி செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தெரிவித்துள்ளதாவது: 

அரியானா மாநிலம், சண்டிகரிலுள்ள பஞ்சுகுலா எனும் பகுதியில் ஏறத்தாழ 40 ஆண்டுகளாக வசித்துவரும் தமிழர்களின் குடிசைப்பகுதிகள் அகற்றப்படுமென்று அம்மாநில அதிகாரிகளால் அறிவிக்கை கொடுக்கப்பட்டு, மற்றவர்களுக்கெல்லாம் அடுக்குமாடி குடியிருப்பில் மாற்று வசிப்பிடம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழர்கள் மட்டும் புறக்கணிக்கப்பட்டுள்ள செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். இதனை எதிர்த்தும், வாழ்விடத்தை உறுதி செய்யக்கோரியும் அப்பகுதி மக்களோடு சேர்ந்து சண்டிகர் நாம் தமிழர் கட்சி சார்பாக அரியானா உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கிலும் உரிய நீதி கிடைக்கப்பெறாத சூழ்நிலையில் தமிழர்கள் நடுத்தெருவில் நிற்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது தாங்கொணாத் துயரத்தைத் தருகிறது. 

அரியானா மாநிலத்தில் மட்டும் ஏறத்தாழ ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டத் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக, தலைநகர் சண்டிகரில் மட்டும் பல்லாயிரக்கணக்கான ஏழை, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த தமிழ் மக்கள் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக அடிப்படை வசதிகள்கூடக் கிடைக்கப்பெறாமல் குடிசைப்பகுதிகளிலேயே வாழும் நிலையே இன்றளவும் நிலவுகிறது. அரசின் சார்பாக வசிப்பிட வசதி, குடிநீர் வசதி, மருத்துவ வசதி, மின்சார வசதி, சாலை வசதி, கழிப்பிட வசதி என எவ்விதத் தேவைகளும் நிறைவுசெய்துதராத நிலையில், தமிழர்கள் தங்கள் சொந்த முயற்சியிலயே இவற்றை அமைத்துக்கொண்டு மிகக்கடினமான சூழ்நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர். அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அஞ்சலகத் தேர்வுகளில் வெற்றிப்பெற்று தமிழ்நாட்டுப் பணியிடங்களில் வேலைக்குச் சேரும் நிலையில், அரியானாவில் வாழும் தமிழர்களுக்கு வேலை வாய்ப்போ, சுயதொழில் தொடங்க உதவியோ அம்மாநில அரசின் சார்பில் வழங்கப்படுவதில்லை. 

ஒரே நாடு , ஒரே குடும்ப அட்டை திட்டத்தின் மூலம் தமிழகத்தில் குடியேறியுள்ள பல இலட்சக்கணக்கான வடமாநிலத்தவர்கள் பயன்பெறும் சூழ்நிலையில், 40 ஆண்டுகளாக வாழ்ந்தும் அரியானா வாழ் தமிழர்களுக்குக் குடும்ப அட்டைகூட வழங்கப்படாமல் இரண்டாம்தரக் குடிமக்களாகவே அவர்கள் நடத்தப்படுவது மிகப்பெரும் கொடுமையாகும். தமிழ்நாட்டில் குடியேறிய வெளிமாநிலத்தவர்கள் நான்கு ஆண்டுகள் வாழ்ந்தாலே வாக்குரிமை உட்பட அனைத்துரிமையையும் பெற்றுவிடும்போது, தமிழர்கள் மட்டும் எங்கு சென்றாலும் அடிமைகள், அகதிகள் போல வாழும் நிலை நிலவுவது பெரும் வேதனையளிக்கிறது. 

கடந்த ஆண்டு நடைப்பெற்ற சட்டமன்றத்தேர்தலில் தமிழர்களின் ஒருமித்த ஆதரவைப்பெற்று வெற்றிபெற்ற தற்போதைய அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் அவர்கள் தமிழ் மக்களிடம் பாகுபாடு காட்டப்படாது என்றும், குடிசைப்பகுதி பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணப்பட்டு அவர்களுக்கு வாழ்விடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும் என்றும் உறுதி அளித்திருந்தார். ஆனால், அந்த உறுதிமொழி இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை. ஆகவே, அரியானா வாழ் தமிழர்களின் வசிப்பிடப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வுகாணவும், அவர்களுக்கான மாற்றுக்குடியிருப்பை உடனடியாக உறுதி செய்யவும் அரியானா மாநில அரசுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி, அழுத்தம் கொடுத்து அச்சிக்கலைத் தீர்க்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

 

PREV
click me!

Recommended Stories

தைரியம் இருந்தால் ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்தை மாற்றுங்க! பாஜகவுக்கு துணை முதல்வர் சவால்!
வேர் இஸ் அவர் லேப்டாப்..? முதல்வர் ஸ்டாலினின் தேர்தல் நாடகம்..! அடித்து ஆடும் இபிஎஸ்!