விடைத்தாள் திருத்தும் மையங்களில் உரிய பாதுகாப்பு இல்லை..!! தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் பரபரப்பு குற்றச்சாட்டு..

By Ezhilarasan BabuFirst Published May 28, 2020, 5:31 PM IST
Highlights

மேலும் விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்படும் என்று அறிவித்துவிட்டு பேருந்துகளில்,  இரட்டிப்பு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

கொரோனா பரவல் அச்சத்திற்கு மத்தியில் 12 ஆம் வகுப்பு  விடைத்தாள் திருத்தும் பணியில் ஆசிரியர்கள் கடமை உணர்வுடன் ஈடுபட்டு வரும் நிலையில் விடைத்தாள் திருத்தும்  மையங்களில் உரிய பாதுகாப்பு வசதிகளை உடனே  செய்துதர வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.  இதுகுறித்து அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- 27-05-2020 அன்று தொடங்கப்பட்ட 12 ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி மிகுந்த பாதுகாப்பு வசதிகளுடன் நடைபெறும் என மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ஏற்கனவே அறிவித்தார். அதாவது ஒரு மையத்திற்கு போதிய சமூக இடைவெளி கடைபிடிக்கும் வகையில் 150 ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்துவார்கள் என்று அவர் கூறியிருந்தார்.

ஆனால் தற்போது அதுபோன்ற எந்த பாதுகாப்பு விதிமுறைகளும் இன்றி,  500 ஆசிரியர்கள் மற்றும் இதற பணியாளர்கள் 60 பேர் உட்பட 560 பேர் என்றும், ஒரு சில மையங்களில்  300 பேர் என்றும் மையங்களுக்கு ஏற்ப, விடைத்தாள் திருத்தும்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் பெரும்பாலான மையங்களில்  போதுமான சமூக இடைவெளி இல்லாத நிலையே உள்ளது.  இதனால் கொரோனா தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்ச உணர்வுடன் ஆசிரியர்கள் மற்றும் இதற பணியாளர்கள் பணிபுரிய வேண்டிய சூழல் உள்ளது. மேலும் விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்படும் என்று அறிவித்துவிட்டு பேருந்துகளில்,  இரட்டிப்பு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. விடைத்தாள் விநியோகிப்போர், விடைத்தாள் திருத்துவோர், மேற்பார்வையாளர் என பலரிடம் விடைத்தாள்கள் கைமாறுவதால், 

ஒருவருக்கு தொற்று இருந்தாலும் அம்மையமே தொற்றால் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆகையால் கையுறை வழங்குவதுடன் தினந்தோறும் முகக்கவசமும் வழங்கவேண்டும். மையத்திற்கு 150 ஆசிரியர்கள் மட்டுமே விடைத்தாள் திருத்தும் வகையில் மையத்தை மாற்றியமைப்பதுடன்,  பேருந்துக்கு உரிய கட்டணம் மட்டும் வசூலிக்கவும்,  ஆசிரியர்கள்-அலுவலக பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் ஆவன செய்யுமாறு மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது. 
 

click me!