
அதிமுக இரண்டாக பிளவு பட்டு அதிமுக பொது செயலாளர் சசிகலா மற்றும் ஓ.பி.எஸ் என இரு அணிகளாக செயல்படுகிறது. இதனால், யார் முதலமைச்சர் பதவியில் உட்காருவது என கடும் போட்டி நிலவியது. இதனால், இரு தரப்பினரும் கவர்னரிடம், தங்களை ஆட்சி அமைக்க அழைக்குமாறு வலியுறுத்தினர்.
இதையடுத்து, கவர்னர் வித்யாசாகர் ராவ், எம்எல்ஏக்களின் பட்டியலை ஆய்வு செய்தார். அதில், சசிகலா தரப்பினர் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. ஆனால், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் அவர் உள்பட 11 பேர் மட்டுமே இருந்தனர்.
இதனால், அதிமுக பொது செயலாளர் சசிகலா தரப்பில் எடப்பாடி பழனிச்சாமிக்கு, முதலமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். பின்னர், 15 நாட்களுக்குள் தனி பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இதைதொடர்ந்து, கடந்த 16ம் தேதி சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. அதில், எடப்பாடி பழனிச்சாமியின் தனிப் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓ.பன்னீர்செல்வம் தோல்வியுற்றார்.
இதைதொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அனைத்து அமைச்சர்களும், இன்று பெங்களூர் செல்ல திட்டமிட்டுள்ளனர். அங்கு பார்ப்பன அக்ரஹார சிறைச்சாலையில் உள்ள அதிமுக பொது செயலாளர் சசிகலாவை சந்தித்து, வாழ்த்து பெற முடிவு செய்துள்ளனர்.
அப்போது, நம்பிக்கை வாக்கெடுப்பின்போது திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினரின் ரகளை, கவர்னரிடம் மனு கொடுத்தது உள்பட அனைத்து விஷயங்களை தெரிவிக்க உள்ளனர் என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நேற்று மாலை டி.டி.வி.தினகரன், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், இளவரசி மகன் விவேக் ஆகியோர் பரப்பன அக்ரஹார சிறைக்கு சென்று, சசிகலாவை சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.