இதை செய்யாதவரை மோடியால் மக்களை காப்பாற்ற முடியாது... அழகிரி அதிரடி..!! கி. வீரமணி எச்சரிக்கை..!!

By Ezhilarasan BabuFirst Published May 26, 2020, 11:55 AM IST
Highlights

மக்களிடம் வாங்கும் சக்தியை அதிகரிப்பதற்கு நிதியை ஒதுக்க வேண்டும்,  இதை செய்யாதவரை பொருளாதார பேரழிவிலிருந்து மக்களை மோடி அரசால் காப்பாற்ற முடியாது என அழகிரி தெரிவித்துள்ளார். 

கொரோனா நோய்த்தொற்று எதிர்த்து போராடும் தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு தாராளமாக உதவி செய்ய வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  மகாராஷ்டிரா , தமிழ்நாடு ,  குஜராத் ,  டெல்லி, மத்திய பிரதேசம் , மேற்கு வங்கம் , ராஜஸ்தான் ஆகிய ஏழு மாநிலங்களில் கொரோனா வைரஸ் அதிகம் பரவக்கூடிய வாய்ப்பு அடுத்து வரும் இரண்டு மாதங்களில், அதாவது  ஜூன், ஜூலை மாதங்களில்  இருக்கக்கூடும் என்பதால் அதிகமான பரிசோதனையும், நோய்க்கான சிகிச்சை கருவிகளையும் ,  தீவிர சிகிச்சை பிரிவுகளையும் (ஐசியு )எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று ஓர் எச்சரிக்கை மணி அடித்து உள்ளனர் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள். 

 

ஐசியு என்ற தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள படுக்கைகள் , வென்டிலேட்டர் ,  பிராணவாயு வசதியுடன் கூடிய தனிமைப்படுத்தப்பட்டுள்ள படுக்கைகள் போன்றவற்றை அந்த ஏழு மாநிலங்களில்  சுட்டிக்காட்டப்பட்டுள்ள தீவிர நோய் தாக்கு (ஹாட்ஸ் பாட்)  பகுதிகளில் அதிகப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.  அதேநேரத்தில் மாநிலங்களுக்கு  சுகாதாரத்துறை அடிக்கட்டுமான வசதிகளை பெறுவதற்குரிய கூடுதல் நிதியை, அல்லது மருத்துவ உபகரணங்களையும்,  மத்திய பேரிடர் நிதியிலிருந்து அல்லது பி.எம் கேர்ஸ் பஃண்ட் என்ற புதிதாக தொடங்கப்பட்ட நிதியிலிருந்து மாநிலங்களுக்கு அளிக்க வேண்டும்,  13 கோடி ஏழை குடும்பங்களுக்கு ரொக்கப்பணம் தரும் திட்டம் போல ஏதாவது செய்ய வேண்டும்,  தடுப்பு நடவடிக்கைகளால் சரியும் மாநில அரசுகளுக்கு நிதி ஆதாரத்தை தாராளமாக வழங்கிட மத்திய அரசு முன் வர வேண்டும் இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

அதே நேரத்தில் இது குறித்து தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி ,  வெறும் அறிவிப்புகளால் எந்தப் பலனும் ஏற்படாது, மக்களிடையே வாங்கும் சக்தியை அதிகரிப்பதற்கு நிதியை ஒதுக்க வேண்டும் எனவும்  மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர்,  பிரதமர் மோடி அறிவித்த நிவாரண தொகை 20 லட்சம் கோடியை உண்மையில் கணக்கிட்டால் ரூபாய் ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 650 கோடி தான்.  இது மொத்த ஜிடிபியில் 1.91 சதவீதமே தவிர 10 சதவீதம் அல்ல என்று தெரிவித்துள்ளார்.  பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 2018-19 இல் 5. 87 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன . ஆனால் 2019-20 ல்  5. 57 லட்சமாக குறைந்துள்ளது.  வறுமை ஒழிப்பு திட்டமான தீனதயாள் அந்த்யோதயா யோஜனா தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் 2018-19 ஆம் ஆண்டு புதிய வேலைவாய்ப்புகள் 1.78 லட்சத்திலிருந்து 44 ஆயிரத்து 66 ஆக 2019-20 குறைந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.  இந்தியாவின் எதிர்காலம் குறித்து மத்திய அரசிடம் எந்த செயல் திட்டமும் இல்லை.  இதில் இருந்து இந்தியாவை மீட்டு மீண்டும் தொழில் உற்பத்தியை பெருக்குவதற்கு மத்திய அரசு மேலும் அதிக நிதி ஒதுக்க வேண்டும். வெறும் அறிவிப்புகளால் எந்தப் பலனும் ஏற்படாது ,  மக்களிடம் வாங்கும் சக்தியை அதிகரிப்பதற்கு நிதியை ஒதுக்க வேண்டும்,  இதை செய்யாதவரை பொருளாதார பேரழிவிலிருந்து மக்களை மோடி அரசால் காப்பாற்ற முடியாது என அழகிரி தெரிவித்துள்ளார். 

 

click me!