முதல்முறையாக பிரதமருக்கு எல்.முருகன் எழுதிய அதிரடி கடிதம்..!! மீண்டும் வேகம் எடுத்த தமிழக பாஜக..!!

By Ezhilarasan BabuFirst Published May 4, 2020, 2:54 PM IST
Highlights

வளைகுடா நாடுகளில் வாழும் இந்தியர்கள் நிலை குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் நேரடியாக கேட்டறிந்து வருவது பெரும் ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதையும் உலுக்கி வரும் கொரோனா வளைகுடா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளையும் விட்டு வைக்கவில்லை. வளைகுடா நாடுகளில் கொரோனா தொற்று காரணத்தால் அங்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்றயை நிலவரப்படி (03.05.2020)  சவுதி அரேபியாவில் 27 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1500 பேருக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இதைப்போலவே கத்தார், ஐக்கிய அரபு நாடுகள், குவைத், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. வளைகுடா நாடுகளில் மட்டும் ஒரு கோடி இந்தியர்கள் வசிக்கின்றனர்.  கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களில் இந்தியர்களும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேநிலை நீடித்தால் வளைகுடா நாடுகளில் 2 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கொரோனா பாதிப்பு ஒருபுறம் என்றால், இதன் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அனைத்து வகையான நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. உலகளாவிய பொருளாதார முடக்கமும் மத்திய கிழக்கு நாடுகளை கடுமையாக பாதித்துள்ளது. இந்த நிறுவனங்களில் பணிபுரிந்து வந்த இந்தியத் தொழிலாளர்கள் அவர்கள் தங்கும் விடுதிகளிலேயே முடங்கியுள்ளனர். 

உலகம் முழுவதையும் சவாலுக்கு ஆட்படுத்தியுள்ள இந்த சூழல் வளைகுடாவில் வசிக்கும் இந்தியர்களை மிகவும் சோதனைக்கு ஆளாக்கி இருப்பது ஒவ்வொரு இந்தியரையும் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாக்கியுள்ளது. குறிப்பாக வளைகுடா நாடுகளில் வசிக்கும் தமிழர்களின் குடும்பத்தினர் பெரும் அச்சத்திலும், மன வேதனையிலும் தவிக்கின்றனர். தங்கள் சொந்தங்கள் எப்போது தாயகம் திரும்பும் என்ற அவர்கள் குடும்பத்தினரின் தவிப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோலவே  தங்கள் வாழ்வாதாரத்திற்காக வளைகுடா நாடுகளில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களும் கொரோனா ஊரடங்கால் அங்கு சிக்கிக் கொண்டனர். தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த மீனவர்கள் கணிசமான அளவில் அங்கு சிக்கித்  தவிக்கின்றனர். ஈரானில் மட்டும் தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 1500 மீனவர்கள் சிக்கி இருப்பதாக தெரிய வருகிறது. அவர்கள் அனைவருக்கும் மீன்பிடித் தொழிலே வாழ்வாதாரம். கொரோனாவால் அவர்களும் தாயகம் திரும்புவது கேள்விக்குறியாகியுள்ளது. ஈரானில் ஏறக்குறைய 97 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதும், அங்கு 6200க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதும் அச்சத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. 

 

தங்கள் சொந்த உறவுகள் திரும்ப முடியாமல் ஈரான் உள்ளிட்ட நாடுகளில் சிக்கியுள்ளதால் அவர்களது குடும்பத்தினர் செய்வதறியாமல் திகைத்து வருகின்றனர். தமிழக மீனவர்கள் பாதுகாப்பாகவும், நோய் தொற்று பரவாமலும் சொந்த ஊருக்கு உடனடியாக அழைத்து வரப்பட வேண்டும் என்பதே அவர்களது குடும்பத்தினரின் கோரிக்கையாக உள்ளது. வாழ்வாதாரத்திற்காக சென்ற  அவர்களின் உடல்நலமும், பாதுகாப்பும் கேள்விக்குறியாகி வருவதால் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த சோதனையான காலக்கட்டத்தில் வளைகுடா நாடுகளில் வாழும் இந்தியர்கள் நிலை குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் நேரடியாக கேட்டறிந்து வருவது பெரும் ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. திரு.நரேந்திர மோடி அவர்கள் நேரடியாக இந்த விவகாரத்தில் பெரும் முயற்சி செய்து வருவதும் தமிழக மக்களுக்கு ஆறுதலாக உள்ளது.  குவைத் பிரதமர் ஷேக் சபா அல்-கலீத் அல்-ஹமத் அல்-சபா உட்பட மத்திய கிழக்கு நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களும் தொடர்ந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வருவதும்,  மீட்பு நடவடிக்கைக்கு உந்துதலாக அமைந்துள்ளது. மேலும் அங்கு இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் இந்திய தூதரகம் வாயிலாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதும் சரியான தருணத்தில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையாகும். 

இதுமட்டுமின்றி வெளிநாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வரும் தகவலும் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கை விரைவில் தொடங்க உள்ளதாக வரும் தகவலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக கடற்படை மற்றும் ஏர் இந்தியா விமானங்கள் தயார்ப்படுத்தப்பட்டு வருகின்றன. வளைகுடா நாடுகளில் வசிப்பவர்களில் கணிசமான பகுதியினர் துறைமுக நகரங்களில் வசிக்கின்றனர். எனவே இந்திய கடற்படைக்கு சொந்தமான  கப்பல்களை அனுப்பி அழைத்து வர ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தெரிகிறது. இதுபோலவே துறைமுகங்கள் இல்லாத மற்ற பகுதிகளில் ஏர் இந்தியா விமானங்களை அனுப்பி மீட்டு வருவது குறித்து ஆலோசனைகள் நடந்து வரும் தகவலும் பெரிய அளவில் நம்பிக்கையை துளிர்க்கச் செய்துள்ளது. அவ்வாறு மீட்கப்படும் போது, முதலில் வசதி குறைந்த தொழிலாளர்களை முன்னுரிமை அடிப்படையில் மீட்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என திரு.நரேந்திர மோடி அவர்கள் உறுதியளித்துள்ளது சாதாரண தொழிலாளர் வர்கத்தினர் மீது அவர் வைத்துள்ள பாசத்தையும், நேசத்தையும் வெளிப்படுத்துகிறது. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் உடனடியாக தாயகம் அழைத்து வரப்படுவார்கள் என்பதை உறுதிப்படுத்துகின்றன. வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை ,குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உடனடியாக வந்து சேரும் நாளை அவர்களது குடும்பத்தினர் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

எனவே இந்த பணிகளை,  மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து உடனடியாக விரைவுபடுத்த வேண்டும் என தமிழக பாஜக சார்பில் வேண்டுகோள் வைக்கிறேன். வெளியுறவு அமைச்சகம் மூலம் சம்பந்தப்பட்ட நாடுகளை தொடர்பு கொண்டு, விரைவாக மீட்டு வரும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை தமிழக பாஜக சார்பில் கேட்டுக் கொள்கிறேன். குறிப்பாக ஈரானில் சிக்கியுள்ள 1500 மீனவர்கள், தமிழக மீனவர்கள் அனைவரையும் மீட்டு வருவதற்கும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.  வெளிநாடுகளில் இருந்து தமிழகத்தை சேர்ந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பும் வேளையில் அவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை தமிழக அரசும் விரைந்து செய்திட வேண்டும். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யவும், அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளை செய்து தரவும் தமிழக அரசு உரிய ஏற்பாடுகளை உடனடியாக செய்ய வேண்டும். அவர்கள் தாயகம் திரும்பும் போது ஏற்படும் சூழலை உணர்ந்து அதற்கு ஏற்றவகையில் மிக விரைவாக ஏற்பாடுகள் செய்யப்படுவது மிகவும் அவசியமானது. அதற்கு தமிழக அரசு தயாராக வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி திரு. பழனிசாமி அவர்களை தமிழக பாஜக சார்பில் கேட்டுக் கொள்கிறேன். 

 

 

 

click me!