இந்தியாவில் கடைசி மன்னர், சிங்கம் பட்டி ஜமீனுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு..!! தமிழக பாஜக கோரிக்கை..!!

By Ezhilarasan BabuFirst Published May 25, 2020, 4:03 PM IST
Highlights

பாஸ்கர சேதுபதி ஆகியோருக்கு நேரடி உறவுக்காரர். ராமேஸ்வரம் கடல் பகுதியை காக்கும் பொறுப்பு ராமநாதபுரம் ராஜாவுக்கு உண்டு. அதனால் அவர் சேதுபதி. அதுபோல தாமிரபரணி ஆற்றின் புனிதத் தலங்களை காக்கும் இவர் தீர்த்தபதி. அரும்பெரும் சிந்தனையாளர், கொடையாளர், 

தமிழகத்தின்  கடைசி ஜமீனான சிங்கம்பட்டி ஜமீன் மறைந்ததையொட்டி, இந்தியாவின் கடைசி மன்னர் என்ற முறையில் அவரது இறுதிச் சடங்கை அரசு மரியாதையோடு நடத்த வேண்டும் என  தமிழக பாஜக தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. தமிழகத்தின்  கடைசி ஜமீனான சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி உடல்நலக் குறைவால் காலமானார் அவருக்கு வயது (89) திருநெல்வேலி மாவட்டம் சிங்கம்பட்டியில் 36 ஆவது ஜமீனாக இருந்தவர் முருகதாஸ்  தீர்த்தபதி . ஜமீன்தாரி முறை ஒழிப்புக்கு வந்தபின்னர் இந்தியாவில் முடிசூட்டு பட்டம் கட்டிய மன்னர்களில் கடைசி மன்னர் இவர்தான்.  இவரது முழுப்பெயர் தென்னாட்டு புலி நல்ல குட்டி சிவசுப்பிரமணிய கோமதி சங்கர ஜெய தியாக முத்து சண்முகசுந்தர முருகதாஸ் தீர்த்தபதி என்பதுதான்.  சுருக்கமாக டிஎன்எஸ் முருகதாஸ் தீர்த்தபதி என அழைக்கப்பட்டார், ஆங்கிலத்தில் மிகவும் புலமை வாய்ந்தவர்,  ஏழை எளிய மக்களுக்கு உதவுவது கொடையளிப்பது போன்ற  பல காரியங்களில் ஈடுபட்டு வந்தார்,

 

இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில் விடுதலைப் புலிகளுக்கு பயிற்சி முகாம் அமைத்து கொடுக்கவும் அதற்கான உதவிகள் செய்யவும் உதவினார் எனக் கூறப்படுகிறது,  இத்தனை சிறப்புமிக்க சிங்கம்பட்டி ஜமீன் மறைவையொட்டி  அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ள தமிழக பாஜக,  சிங்கம்பட்டி ஜமீன் இறுதிச் சடங்கு  அரசு மரியாதையுடன் நடைபெற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது,  இதுகுறித்து தமிழக பாஜக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் முழு விவரம் :- மன்னர் ஆட்சி முறையில் இந்தியாவில் முடிசூட்டப்பட்ட கடைசி மன்னர்,  ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிங்கம்பட்டி ஜமீன் அரசர். விடுதலைக்குப் போராடிய வீரப் பேரரசி வேலுநாச்சியார், மற்றும்  விவேகானந்த சுவாமியை சிக்காகோ அனுப்பிய இராமநாதபுரம் மன்னர்  பாஸ்கர சேதுபதி ஆகியோருக்கு நேரடி உறவுக்காரர். ராமேஸ்வரம் கடல் பகுதியை காக்கும் பொறுப்பு ராமநாதபுரம் ராஜாவுக்கு உண்டு. அதனால் அவர் சேதுபதி. அதுபோல தாமிரபரணி ஆற்றின் புனிதத் தலங்களை காக்கும் இவர் தீர்த்தபதி. அரும்பெரும் சிந்தனையாளர், கொடையாளர்,

 

மிகுந்த ஆங்கிலப் புலமை மிக்கவர், தமிழுக்கும் சைவத்துக்கும் பாடுபட்டவர், அனைத்து ஆன்மீக சமூக இயக்கங்களுக்கும் துணை நின்றவர், இங்கிலாந்தில் பயின்றவர். மேற்கு தொடர்ச்சி மலையின் 80 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு  நிலத்திற்கு உரிமையாளர். பல இலட்சம் மக்கள் கூடும் பாபநாசம்  சொரிமுத்து அய்யனார் கோவிலின் பரம்பரை அறங்காவலர், சாதி,மத , இன வேறுபாடு பார்க்காமல் அனைவரிடத்தும் அன்புடன் பழகி வந்தவர். அன்னாரின் மறைவுக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்தம் குடும்பத்தாருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவின் கடைசி மன்னர் என்ற முறையில் அவரது இறுதிச் சடங்கை அரசு மரியாதையோடு நடத்த வேண்டும் என  தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன், என தமிழக பாஊக மாநிலத்தலைவர் எல் .முருகன் கோரிக்கை வைத்துள்ளார்.  
 

click me!