தேர்தலில் தோற்றும் அடங்காத பாஜக... ஸ்டாலினை சீண்டும் தமிழிசை..!

By vinoth kumarFirst Published May 24, 2019, 11:08 AM IST
Highlights

நாடாளுமன்ற தேர்தலில் துாத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை, திமுக வேட்பாளர் கனிமொழியிடம் தோல்வியைத் தழுவினார். 

நாடாளுமன்ற தேர்தலில் துாத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை, திமுக வேட்பாளர் கனிமொழியிடம் தோல்வியைத் தழுவினார்.

  

தோல்விக்குப் பின்னர் தனது வீட்டில் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:  மத்தியில் மோடி தலைமையில் ஆட்சி அமைந்தது மகிழ்ச்சியாக உள்ளது. இன்னும் மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால், இது தொங்கு பாராளுமன்றமாக அமையாமல் தங்கும் பாராளுமன்றமாக அமைந்தது தான். கடந்த சில காலங்களில் நல்ல திட்டங்களையும் தவறான திட்டங்களாக முன்னிறுத்தி மக்கள் மத்தியில் கொண்டு சென்று விட்டனர். 

தமிழக மக்கள் அதற்கு செவிசாய்த்து வாக்களித்து விட்டனர்.  தூத்துக்குடியில் இந்த பகுதி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகத் தான் நான் வேட்பாளராக இங்கு வந்தேன். தண்ணீர் பிரச்சினையை தீர்க்க என்னால் முடிந்த நடவடிக்கைகளைத் தொடர்வேன். எனக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் பயன்பெறும் வகையில் எனது மக்கள் பணி தொடரும். நாங்கள் தமிழகத்தில் வெற்றி பெற முடியாமல் போனதில் வருத்தம் இல்லை. ஆனால் உரிமையோடு பல திட்டங்களைக் கொண்டு வரலாம் என நினைத்திருந்து, அது முடியாமல் போனது தான் ஆதங்கம். இடைத் தேர்தலில் எங்கள் கூட்டணி கட்சி வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள். 

மு.க.ஸ்டாலின் பெற்றிருப்பது மிகப்பெரிய வெற்றி இல்லை. தமிழகத்தில் அதிமுக, பாஜக கூட்டணி வெற்றி பெற்றிருந்தால் தமிழகம் இன்னும் அதிகம் பலன் அடைந்திருக்கும். மு.க.ஸ்டாலினின் வெற்றி தமிழகத்திற்கு எந்தப் பலனும் இல்லாத வெற்றி. வழக்குகள் நிலுவையில் உள்ளவர்கள் வெற்றி பெற்று இருக்கிறார்கள். அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக தொடர முடியுமா என்ற சூழ்நிலை உருவாகும். அது ஸ்டாலினுக்கு தலைவலியாக மாறும். மு.க. ஸ்டாலினால் வெளிநடப்பைத் தவிர வேறு எதையும் செய்ய முடியாது. இவ்வாறு தமிழிசை கூறினார்.

click me!