தமிழிசையை தாறுமாறாக அப்செட்டாக்கிய தெலுங்கானா... ஆரம்பமே அதகளம்தான் போங்கள்..!

By Vishnu PriyaFirst Published Sep 16, 2019, 7:12 PM IST
Highlights

புதுச்சேரியில் பா.ஜ. தனது கட்சியின் முக்கிய அங்கமாக இருந்த கிரண் பேடியை கவர்னராக்கி, அந்த மாநில முதல்வர் நாராயணசாமியின் நடவடிக்கைகளை கண்காணித்து, கட்டுக்குள் வைத்திருப்பது போல் தெலங்கானாவிலும் தமிழிசை மூலம் மாநில சுயாட்சியில் மத்திய அரசு தலையிட திட்டமிட்டுள்ளது என்பதே அம்மாநிலத்தை ஆளும் அரசின் அச்சம்.

தமிழக பா.ஜ. தலைவராக இருந்த தமிழிசை செளதரராஜன் தெலுங்கானா மாநில கவர்னராக அறிவிக்கப்பட்டதும் விவரிப்பை தாண்டிய சந்தோஷத்தில் குதித்தார். 

தனது அப்பாவும், மூத்த காங்கிரஸ் தலைவருமான குமரி அனந்தனை சந்தித்து ஆசி பெற்றார். கோயிலுக்குப் போனார், மகிழ்ச்சி பொங்க மீடியாக்களுக்கு ‘நான் கவர்னர்! நான் கவர்னர்!’ என்று பேட்டி தட்டினார். ஏக மகிழ்ச்சியுடன் தான் இங்கிருந்து தெலுங்கானாவுக்கு கிளம்பினார். அவர் பதவியேற்ற நாளில் தமிழக துணை முதல்வர், வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் அவரை தெலுங்கானாவே சென்று வாழ்த்திவிட்டு வந்தனர்.

 

ஏக சந்தோஷத்துடன் கவர்னர் வாழ்வை துவக்கிய தமிழிசைக்கு முதல் நாளிலேயே அப்செட் ஆப்பு வைத்துவிட்டது அந்த மாநில அரசின் ஒரு அங்கம். அதாவது தமிழிசை பதவியேற்ற செப்டம்பர் 8-ம் தேதியன்று வெளியான ‘தி ஹன்ஸ் இந்தியா’ எனும் ஆங்கில பத்திரிக்கையில், தெலுங்கான முதல்வர் சந்திரசேகரராவின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரியான வனம் நரசிம்ம ராவ் என்பவர் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில், கவர்னர்களை நியமிப்பது தொடர்பான சர்க்காரியா கமிஷன் பரிந்துரையை மேற்கோள் காட்டியவர், ‘தற்போது கவர்னர்கள் நியமனம் அரசியல் சார்புடையதாக மாறிவிட்டது. பல மாநிலங்களிலும் இதே நிலைதான் உள்ளது. இதன் மூலம் மாநில அரசின் செயல்பாடுகளில் மத்திய அரசு தலையிடுகிறது.’ என்று போட்டுத் தாக்கிவிட்டார். 

ஆக புதுச்சேரியில் பா.ஜ. தனது கட்சியின் முக்கிய அங்கமாக இருந்த கிரண் பேடியை கவர்னராக்கி, அந்த மாநில முதல்வர் நாராயணசாமியின் நடவடிக்கைகளை கண்காணித்து, கட்டுக்குள் வைத்திருப்பது போல் தெலங்கானாவிலும் தமிழிசை மூலம் மாநில சுயாட்சியில் மத்திய அரசு தலையிட திட்டமிட்டுள்ளது என்பதே அம்மாநிலத்தை ஆளும் அரசின் அச்சம். இதுவே இப்படி வனம் நரசிம்மராவ் மூலமாக வெளியாகிவிட்டது! என்று விமர்சனங்கள் எழுந்தன. 

பதவியேற்று, பணியை துவங்கிய முதல் நாளிலேயே இப்படி அபசகுனமாக விமர்சனங்களை தெலுங்கான அரசின் முக்கிய அதிகாரி கிளப்பிவிட்டாரே என்று தமிழிசை செம்ம அப்செட். இந்நிலையில், பா.ஜ.வின் கூட்டணியில் இருக்கிறார் தெலுங்கான முதல்வர் சந்திரசேகர ராவ். அவரது ஒப்புதல் இல்லாமல் எப்படி  ஒரு அரசு அதிகாரி இப்படி வீரியமாக மத்தியரசை விமர்சிக்க முடியும்? என்பதே பா.ஜ.வினரின் எரிச்சல். ஆக தமிழிசைக்கு ஆரம்பமே அதகளத்துடன் தான் துவங்கியிருக்கிறது! தன்னை சீண்டியவர்களுக்கு சூடாக பதிலடி கொடுக்காமல் விடமாட்டார் தமிழிசை. இப்போது கவர்னர் வேறு ஆகிவிட்டார். எனவே அவர் காட்டப்போகும் பாய்ச்சலுக்கு அவர்கள் எதிர்ப்பு காட்டினால், நிலைமை என்னாகுமோ?! புதுச்சேரியை விட மோசமாகதான் இருக்கும் போலிருக்கிறது. 

click me!