
தமிழக அரசியலில் நிலவும் பரபரப்பான சூழல் போல சமீபத்தில் வேறு எங்கும் அரசியல் சூழல் நிலவவில்லை என்று உறுதியாக கூறிவிடலாம். அந்த அளவிற்கு எதிர்பாராத திருப்பங்களால் தினம் தினம் மக்கள் மனதில் விறுவிறுப்பை கூட்டி இருக்கிறது தமிழக அரசியல். அம்மாவின் மறைவு, சின்னம்மாவின் சிறைவாசம் திடீர் முதல்வர் எடப்பாடி என எதுவுமே மக்கள் இதுவரை கனவில் கூட நினைத்து பார்க்காத திருப்பங்கள் தான்.
இதில் அம்மாவின் மறைவிற்கு பிறகு ஓபிஎஸ் ஆதரவாளர்கள், சின்னம்மா ஆதரவாளர்கள், தினகரன் அணி என பிரிந்து கிடக்கிறது ஆளும் கட்சியான அதிமுக. இதில் பெறும்பான்மையை நிரூபித்து தற்போது எடப்பாடி தலைமையிலான அதிமுக ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. ஆனால் இதிலும் கூட மாற்றம் வரலாம், எப்போது வேண்டுமானாலும் இந்த ஆட்சி கவிழலாம் என்றும் ஒரு சூழல் நிலவிக்கொண்டுதான் இருக்கிறது.
அதிமுகவை சேர்ந்த 18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கு தான் இப்படி ஒரு எண்ணம் எழ காரணமாக அமைந்திருக்கிறது. எடப்பாடியின் அரசுக்கு எதிராக 18 எம்.எல்.ஏக்கள் அப்போதிருந்த ஆளுநர் வித்யாசாகரிடம் மனு கொடுத்திருந்தனர். இதனால் அவர்கள் கொறடா உத்தரவை மீறி செயல்பட்டதாக கூறி சபா நாயகர் அவர்களை தகுதி நீக்கம் செய்துவிட்டார்.
இதனை அடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தீர்ப்பளித்த நீதிபதிகளில் ஒருவர் தகுதி நீக்கம் சரி என்றும், மற்றொருவர் சபாநாயகர் நடவடிக்கை செல்லாது என்றும் தெரிவித்திருந்தார். இதனால் இந்த வழக்கு இப்போது மூன்றாவது நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டிருக்கும் சத்ய நாராயணாவிடம் வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணை வரும் வியாழன் அன்று நடைபெற இருக்கிறது. இதனை தொடர்ந்து இந்த விஷயத்தில் தீர்ப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்றால் விரைவில் தமிழகத்தில் 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறலாம். செல்லாது என உத்தரவிட்டால் எடப்பாடிஆட்சி கலையவும் வாய்ப்பு உள்ளது.
இதனால் மீண்டும் ஒரு பரபரப்பான சூழல் உருவாகும் நிலை உள்ளது . இவ்வாறு தமிழகத்தின் அரசியலில் மாபெரும் மாற்றத்தை இந்த தீர்ப்பு உருவாக சாத்தியம் இருப்பதால் மிகவும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாக இது கருதப்படுகிறது.